கோவில் நில ஆக்கிரமிப்பை கண்டித்து உண்ணாவிரதம்


கோவில் நில ஆக்கிரமிப்பை கண்டித்து உண்ணாவிரதம்
x

கொள்ளிடம் அருகே தாண்டவன் குளத்தில் கோவில் நில ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை

கொள்ளிடம், ஜூன்.4-

கொள்ளிடம் அருகே தாண்டவன் குளத்தில் கோவில் நில ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

சிங்க மகாகாளியம்மன் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமத்தில் பழமை வாய்ந்த சிங்க மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள இடத்தில் ஆண்டுதோறும் தீமிதி விழா உள்ளிட்ட விழாக்கள் நடப்பது வழக்கம். நேற்று அதிகாலை திடீரென சிலர் வந்து கோவிலின் எதிர் புறத்திலும் கோவிலுக்குள் செல்ல முடியாத வகையிலும் முள்வேலி வைத்து அடைத்துவிட்டனர்.இதைக்கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து முள்வேலியை அகற்றினர். மேலும் கோவில் நில ஆக்கிரமிப்பை கண்டித்து தாண்டவன்குளம் கிராமத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் கோவில் முன்பு ஒன்றுகூடி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டரிடம் மனு

தொடர்ந்து 4 மணி நேரம் நடந்த உண்ணாவிரதத்துக்கு பிறகு சிங்க மகா காளியம்மன் கோவில் நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர், சீர்காழி உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு கொடுக்க புறப்பட்டு சென்றனர். தாண்டவன்குளம் கிராமத்தில் உள்ள சிங்க மகாகாளியம்மன் கோவிலை சுற்றி திடீரென வேலிவைத்து அடைக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story