புளியரையில் உண்ணாவிரத போராட்டம்
கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்கக்கோரி புளியரையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
அச்சன்புதூர்:
கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்கக்கோரி புளியரையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
உண்ணாவிரத போராட்டம்
தென் தமிழகத்தில் இருந்து கனிம வளங்களான குண்டுக்கல், ஜல்லி, எம்.சாண்ட், மணல் போன்றவை கேரளாவுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லக்கூடாது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி புளியரையில் அய்யாத்துரை பாண்டியன் பேரவை சார்பில் நேற்று காலையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அய்யாத்துரை பாண்டியன் தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ேபசும் போது கூறியதாவது:-
அண்டை மாநிலத்தில் மலைகள், நதிகள், இருக்கின்றது. ஆனால் அதை அவர்கள் எடுப்பதற்கு கனவில் கூட நினைத்து பார்க்கமாட்டார்கள். ஆனால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஒரு நாளைக்கு 750 லாரிகளில் இங்கு உள்ள கனிமங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவு கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகிறது.கொள்ளை லாபம் பெறுவதற்கு இயற்கை வளங்களை அழித்து அண்டை மாநிலத்திற்கு கடத்தினால் நம் மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் சிறு குறு ஒப்பந்ததாரர்கள் விலையேற்றத்தால் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எதிர்கால சந்ததிகளுக்கும் கனிமவளங்கள் கேள்விக்குறியாக மாறிவிடும். இவ்வாறு அவர் பேசினார்.
திரளானவர்கள்
போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. குருநாதன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கணேச பாண்டியன், பெரியார், வைகை பாசன விவசாய சங்க செயலாளர் அன்வர் பாலசிங்கம், நெல்லை மற்றும் தென்காசி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம், தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு நெல்லை மண்டல செயலாளர் செல்லத்துரை, நெல்லை, தென்காசி ஒருங்கிணைந்த விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி, செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.ஏற்பாடுகளை அய்யாத்துரை பாண்டியன் பேரவை தலைவர் பழனிச்சாமி தலைமையில் பேரவை செயலாளர் சரவணபாபு மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.