கஞ்சா விற்ற கணவன்-மனைவி கைது
கஞ்சா
பவானியில் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை பவானி புதிய பஸ் நிலையம் மற்றும் அதன் பின்புறம் உள்ள பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.
அப்போது புதிய பஸ் நிலையம் அருகே ஒரு பெண்ணும், ஆணும் ஒரு மஞ்சப்பையை மறைத்தவாறு நின்று கொண்டிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த பெண் பவானி அருகே உள்ள சேத்துனாம்பாளையம் ராமதாஸ் நகரை சேர்ந்த பழனியம்மாள் (வயது 46) என்பதும், உடன் இருந்தவர் அவருடைய கணவர் ராமநாதன் என்பதும், இவர் பழனியம்மாளுக்கு கஞ்சா விற்க உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய வழங்கிய சேலம் மாவட்டம் மேட்டூர் பொட்டனேரி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை தேடி வருகின்றனர்.