ஆன்லைன் லாட்டரி விற்ற கணவன், மனைவி கைது
ஆன்லைன் லாட்டரி விற்ற கணவன், மனைவி கைது
அய்யம்பேட்டையில் ஆன்லைன் லாட்டரி விற்ற கணவன்-மனைவி போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து லேப்டாப்-செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
ரோந்து பணி
தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத், பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி ஆகியோர் லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர். சம்பவத்தன்று அய்யம்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்கள் அய்யம்பேட்டை அலிம் சதுக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த சிலர் போலீசாரை கண்டதும் ஓடினர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அதே பகுதியில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவது தெரியவந்தது.
கணவன்-மனைவி கைது
இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த காம்ப்ளக்சில் அதிரடியாக நுழைந்த போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட கேரள ஆன்லைன் லாட்டரி அங்கு விற்பனை செய்வது தெரியவந்தது. அப்போது அங்கிருந்த அய்யம்பேட்டை கிங்ஜார்ஜ் தெருவை சேர்ந்த முகமது ரபிக் (வயது48), அவரது மனைவி மும்தாஜ் பேகம் (44) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு லேப்டாப், 3 செல்போன்கள், ரூ.1500ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.