கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை முயற்சி


கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 11 July 2023 2:30 AM IST (Updated: 11 July 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்தனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்தனர்.

அலறல் சத்தம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் முதல் பிரிவை சேர்ந்தவர் சபரி(வயது 41). இவர் ஒரு தேயிலை தொழிற்சாலையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி முத்துமாரி(36). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

நேற்று காலையில் அந்த தம்பதியின் மகன்கள் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டனர். மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து சபரி மற்றும் அவரது மனைவி முத்துமாரியின் அலறல் சத்தம் கேட்டது. உடனே அங்கு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்றனர்.

தீவிர சிகிச்சை

அப்போது கணவன்-மனைவி 2 பேரும், தீயில் கருகி கொண்டு இருந்தனர். உடனே தண்ணீரை ஊற்றி அவர்களை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து நடந்த சிகிச்சைக்கு பிறகு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த வால்பாறை போலீசார், நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் கணவன்-மனைவி 2 பேரும் உடலில் டீசல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. அவர்கள் ஏன் தற்கொலைக்கு முயன்றனர் என்பது தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story