கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
ஆலங்குடி அருகே திருமணமான 14 மாதங்களில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். நகைகளை விற்று கணவர் மது குடித்ததால் ஏற்பட்ட தகராறில் இருவரும் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டனர்.
கணவன்-மனைவி இடையே தகராறு
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திருவரங்குளம் நிம்புனேஸ்வரத்தை சேர்ந்தவர் கருப்பையா மகன் பொற்பனையான் (வயது 30). தொழிலாளி. இவரது மனைவி பிரியங்கா (23). இவர் டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு ஆலங்குடியில் உள்ள ஒரு தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.
இவர்களுக்கு திருமணமாகி 14 மாதங்களே ஆகின்றது. பொற்பனையான் தினமும் மது அருந்தும் பழக்கத்தை வைத்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் பிரியங்காவின் நகைகளை பொற்பனையான் குடிப்பதற்காக விற்று விட்டதால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தம்பதி தற்கொலை
இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கணவன்-மனைவி இடையே பேசி சமாதானப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டின் உத்திரத்தில் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் பிரியங்காவும், வீட்டின் அருகிலுள்ள சிறிய கொட்டகையில் பொற்பனையானும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
சோகம்
தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்த தம்பதியின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 14 மாதங்களே ஆன நிலையில் கணவன்- மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.