கணவன்-மனைவி புகையால் மூச்சுத்திணறி சாவு


கணவன்-மனைவி புகையால் மூச்சுத்திணறி சாவு
x

கணியம்பாடி அருகே செங்கல் சூளையில் தூங்கிய கணவன்-மனைவி புகையால் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.

வேலூர்

இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

செங்கல் சூளை

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 40). இவரது மனைவி அமுல் (30). இந்த தம்பதியினருக்கு சந்தியா (16), சினேகா (14) என்ற மகள்களும், அரவிந்த் (12) என்ற மகனும் உள்ளனர். தெய்வசிகாமணியும், அவரது மனைவி அமுலுவும் அதே ஊரை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 15 ஆண்டுகளாக செங்கல் சூளை நடத்தி வருகின்றனர்.

தம்பதியினர் தினமும் பகல் முழுவதும் சூளையில் வேலை செய்துவிட்டு, இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்று விடுவார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செங்கல் சூளையில் செங்கற்களை வேக வைக்க தீ மூட்டப்பட்டது.

அப்போது தெய்வசிகாமணி மற்றும் அமுல் ஆகியோர் செங்கல் சூளைக்கு பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ள தகர சீட்டின் அடியில் தங்கியுள்ளனர். மேலும் செங்கல் சூளையில் மூட்டப்பட்ட தீ அணையாமல் இருக்க சூளையை சுற்றி தார்ப்பாய் மூலம் மூடப்பட்டிருந்தது.

புகை மண்டலம்

நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை கணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தொடர்மழை காரணமாகவும், செங்கல் சூளை மூடப்பட்டு இருந்ததாலும் தீ அணைந்து புகை மண்டலம் ஏற்பட்டு சுற்றியுள்ள பகுதி முழுவதும் பரவியது.

அப்போது அங்கு தூக்கத்தில் இருந்த தெய்வசிகாமணி, அமுலு ஆகியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அலறி கூச்சலிட்டனர். பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் அவர்களது சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில், இவர்களது பக்கத்து சூளை உரிமையாளர் சீனிவாசன் அந்த வழியாக சென்றபோது அமுலுவின் முனகல் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

கணவன்- மனைவி சாவு

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் தெய்வசிகாமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் இருந்த அமுலுவுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவரும் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த, வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, தாசில்தார் செந்தில், இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், வருவாய் ஆய்வாளர் சந்தியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

உயிரிழந்த தம்பதியினருக்கு சொந்த வீடு இல்லை. பிள்ளைகளுடன், உறவினர் ஒருவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். தாய்-தந்தை இறந்த செய்தியை கேட்டு அவர்களது பிள்ளைகள் கதறி அழுத சம்பவம் பார்ப்போரின் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது.

ஆதரவின்றி பரிதவிக்கும் 3 பிள்ளைகளுக்கும் அரசு உதவ வேண்டும் என்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகையில் மூச்சுத்திணறி கணவன்- மனைவி உயிரிழந்த சம்பவம் கணியம்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story