காவிரி ஆற்றில் மூழ்கி கணவன்-மனைவி சாவு
குழந்தைகள் கண்முன்னே காவிரி ஆற்றில் குளித்த கணவன்-மனைவி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த குழந்தைநகர் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 27), விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி பவித்ரா (23). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு குடும்பத்துடன் ஜனார்த்தனன் சுற்றுலா வந்தார். அவருடன் நண்பர் ஒருவரும் குடும்பத்துடன் மற்றொரு வாகனத்தில் வந்ததாக தெரிகிறது.
தண்ணீரில் தத்தளிப்பு
பூலாம்பட்டி கதவணை பகுதியில் குடும்பத்துடன் சுற்றி பார்த்த ஜனார்த்தனன், விசைப்படகில் சவாரி செய்தும் மகிழ்ந்தார். மேலும் படகு சவாரியின் போது 'செல்பி'யும் எடுத்து கொண்டனர். பின்னர் அங்குள்ள மோளப்பாறை பகுதிக்கு சென்ற ஜனார்த்தனன், குழந்தைகள் இருவரையும் ஒரு பாறையில் அமர வைத்து விட்டு மனைவியுடன் காவிரி ஆற்றில் குளிக்க இறங்கினார்.
கணவனும், மனைவியும் மகிழ்ச்சியுடன் குளித்துக் கொண்டிருந்த போது அவர்களை அறியாமலேயே ஆழமான பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். அவர்களது அபய குரல் கேட்டு குழந்தைகள் இருவரும் கரையில் இருந்து ஆற்றை பார்த்து அழுதனர்.
ஆற்றில் மூழ்கி சாவு
குழந்தைகளின் அழுகுரலும், அந்த தம்பதியின் அபய குரலும் கேட்டு சிறிது தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் கணவன்- மனைவியை மீட்க ஆற்றுக்குள் இறங்கினர். அதற்குள் ஜனார்த்தனனும், அவருடைய மனைவியும் தண்ணீரில் மூழ்கினர்.
ஆற்றுக்குள் இறங்கிய மீனவர்கள் கணவன்-மனைவி இருவரையும் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு பிணமாக மீட்டனர். பெற்றோரின் உடல்களை பார்த்து குழந்தைகள் இருவரும் பரிதவித்த காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.
சோகம்
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆற்றில் மூழ்கிய தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.