கார் மோதி கணவன், மனைவி பலி
சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி பலியாகினர். விபத்துக்கு காரணமான டிரைவரை போலீசார் கைது செய்தனர்
சின்னசேலம்
விவசாயி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தென்தொரசலூர் கிராமம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சாமிதுரை(வயது 50). விவசாயி. இவருடைய மனைவி மலர் (45).
இவர் நேற்று தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கார் மோதியது
இந்திலி முருகன் கோவில் அருகில் உள்ள சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார் சாமிதுரை ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது பற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் பலியான தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
டிரைவர் கைது
இது குறித்த புகாரின் பேரில் விபத்துக்கு காரணமான கார் டிரைவரான சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராயர் மகன் முத்துலிங்கம்(30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.