போடியில் இளம்பெண்ணை தாக்கிய கணவர் கைது
போடியில் இளம்பெண்ணை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
போடியில், மயானம் சாலை பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் (வயது 27). இவரது மனைவி தனலட்சுமி (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்து வந்தனர். மேலும் விவாகரத்து கேட்டு தனலட்சுமி, குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் வழக்கை தொடர்ந்து 2 பேரும், 2 மாதங்கள் சேர்ந்து வாழ நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி தனலட்சுமி, அலெக்ஸ் பாண்டியன் வீட்டிற்கு சென்று அங்கு வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று அலெக்ஸ் பாண்டியன் மது அருந்திவிட்டு வந்து, மனைவியிடம் தகராறு செய்தார். மேலும் அவரை தாக்கி, மானபங்கம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனலட்சுமி, போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அலெக்ஸ் பாண்டியனை கைது செய்தனர்.