இளம்பெண்ணை எரித்துக் கொன்றதாக கணவர் அதிரடி கைது


இளம்பெண்ணை எரித்துக் கொன்றதாக கணவர் அதிரடி கைது
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை எரித்துக் கொன்றதாக கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்

விழுப்புரம்

கண்டமங்கலம்

குடிப்பழக்கத்தால் பிரச்சினை

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் அதனூர் அடுத்த ஆசாரங்குப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகள் சங்கீதா(வயது 24). இவர் வழுதாவூர்-காட்டேரிக்குப்பம் மெயின்ரோட்டை சேர்ந்த டிரைவர் முத்துக்குமரன் என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

இந்தநிலையில் முத்துக்குமரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

சிகிச்சை பலனின்றி சாவு

இதனால் மனமுடைந்த சங்கீதாதன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் அலறி துடித்தார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே சங்கீதா இறப்பதற்கு முன்பு அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் வீட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக நான் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றேன். ஆனால் பின்னால் வந்த என் கணவர் தீ வைத்தார். தீக்குளித்தது தொடர்பாக போலீசிடமோ, நீதிபதியிடமோ, மருத்துவரிடமோ எதுவும் சொல்லக் கூடாது, அப்படி கூறினால் தீ வைத்தது போல் குழந்தைகளையும் கொன்று விடுவேன் என்று மிரட்டினார் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கணவர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் மனைவியை எரித்துக் கொன்றதாக முத்துக்குமரனை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் கண்டமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story