2-வது மனைவியை கொன்று பாழடைந்த கிணற்றில் புதைத்த கணவர் கைது


வெள்ளியணை அருகே பெண் மாயமான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2-வது மனைவியை கொன்று பாழடைந்த கிணற்றில் புதைத்த கணவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

2-வது திருமணம்

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள பள்ளசங்கனூரை சேர்ந்தவர் தனபால் (வயது 34). இவர் சொந்தமாக மாட்டு வண்டி வைத்து மண் அள்ளி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மேனகா (23) என்ற மனைவியும், மணிகண்டன் (4) என்ற மகனும் உள்ளனர்.இந்தநிலையில் கணவரை இழந்து வாழ்ந்து வந்த மேனகாவின் அக்கா அம்பிகாவை (30) தனபால் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அம்பிகாவுக்கு 4½ வயதில் ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது.

நடத்தையில் சந்தேகம்

அம்பிகா வெள்ளியணை வடக்கு தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து கொண்டு கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அம்பிகா, தனபாலுடன் சரிவர பேசுவதில்லை என கூறப்படுகிறது. இதனால் அம்பிகாவுக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் தனபாலுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி அம்பிகாவை மாட்டு வண்டிக்கு மண் அள்ள வேண்டும் என்று கூறி தனபால் அழைத்து சென்றுள்ளார். அதன்பின் அம்பிகா வீடு திரும்பவில்லை. தனபாலும் செல்போனை அணைத்து (சுவிட் ஆப்) விட்டு தலைமறைவாகி விட்டார்.

கிணற்றில் புதைப்பு

இதுகுறித்து அம்பிகாவின் தாயார் காளியம்மாள் வெள்ளியணை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு தனபாலை தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த தனபால் வெள்ளியணை தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் சித்ராவிடம் சரணடைந்து அம்பிகாவை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார்.இதனையடுத்து வெள்ளியணை போலீசார் தனபாலை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், தன்னிடம் ஏன் பேசுவதில்லை என்று அம்பிகாவிடம் கேட்டபோது எங்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் அம்பிகாவை அடித்து கொன்று தெற்கு மேட்டுப்பட்டியில் உள்ள பாழடைந்த தண்ணீர் இல்லாத கிணற்றில் புதைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பரபரப்பு

இதனையடுத்து அம்பிகா புதைக்கப்பட்ட கிணற்றை தனபால் போலீசாரிடம் அடையாளம் காட்டினார். இதையடுத்து கரூர் தாசில்தார் பன்னீர்செல்வம், போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் ஆகியோர் முன்னிலையில் அம்பிகாவின் உடல் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அந்த பகுதியிலேயே தடுப்பு ஏற்படுத்தப்பட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ குழுவினரால் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story