மனைவியை கொன்று கணவர் தற்கொலை
பொள்ளாச்சி அருகே லாட்டரி சீட்டு வாங்கியதை கண்டித்ததால், மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே லாட்டரி சீட்டு வாங்கியதை கண்டித்ததால், மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
வயது முதிர்ந்த தம்பதி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்ஊத்துக்குளியை சேர்ந்தவர் காளிமுத்து(வயது 65). இவருடைய மனைவி ராஜேஸ்வரி(60). இவர்கள் அங்குள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தனர். இந்த தம்பதியின் மகள் கவிதா மணி, திருமணம் முடிந்து, தனது கணவருடன் கோவையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலையில் சக தொழிலாளர்கள் தோட்டத்துக்கு வேலைக்கு வந்தனர். அப்போது அங்குள்ள வீட்டில் காளிமுத்து தூக்கில் தொங்கிய நிலையிலும், ராஜேஸ்வரி கட்டிலில் படுத்து கிடந்த நிலையிலும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
லாட்டரி சீட்டு
அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காளிமுத்துவுக்கு, கேரள லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்தது. குடும்ப செலவுக்கு வைத்திருக்கும் பணத்தை கூட எடுத்து, லாட்டரி சீட்டு வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதை ராஜேஸ்வரி கண்டித்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கோபித்துக்கொண்ட ராஜேஸ்வரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.
கொலை
இதற்கிடையில் நேற்று முன்தினம் கோவைக்கு வந்த காளிமுத்து, தனது மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் ஜமீன்ஊத்துக்குளிக்கு அழைத்து சென்றார். அப்போது வீட்டில் லாட்டரி சீட்டு இருந்து உள்ளது.
இதை கண்ட ராஜேஸ்வரி, இன்னும் லாட்டரி சீட்டு வாங்குவதை கைவிடவில்லையா? என்று கேட்டு காளிமுத்துவை கண்டித்து உள்ளார். பின்னர் அவர்கள் தூங்க சென்றனர்.
எனினும் ஆத்திரத்தில் இருந்த காளிமுத்து, கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்த ராஜேஸ்வரியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி முகத்தில் தலையணையை வைத்து அழுத்தினார். இதனால் மூச்சுத்திணறி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்கொலை
இதை அறியாத காளிமுத்து, அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சித்தார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் ராஜேஸ்வரி உயிரிழந்து விட்டதை உறுதி செய்த காளிமுத்து, போலீசில் சிக்கிக்கொள்வோம் என்று பயந்தார். உடனே அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்க வேண்டிய வயதை அடைந்த தம்பதி, லாட்டரி சீட்டு மோகத்தால் உயிரை இழந்தது, அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.