பெண் போலீசின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்பத் தகராறில் பெண் போலீசின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அயனாவரம் மேட்டுத்தெருவில் வசித்து வந்தவர் அருள்மணி(வயது 32). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஜோதிலட்சுமி (31). இவர், சென்னை ஆயுதப்படையில் பெண் போலீசாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களுடன் ஜோதிலட்சுமியின் தம்பி விஜயராகவன்(30) தங்கி உள்ளார். இவரும் ஆயுதப்படையில் போலீஸ்காரராக உள்ளார். இவர்களுடைய சொந்த ஊர் தர்மபுரி ஆகும்.
ஜோதிலட்சுமிக்கும், அவருடைய கணவர் அருள்மணிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது விஜயராகவனுக்கும், அருள்மணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் அயனாவரம் போலீசார், இருவரையும் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டுக்கு வந்த அருள்மணி, அதிகாலையில் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று லுங்கியால் தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.