நான் முதல்வன் திட்ட கருத்தரங்கம்
நான் முதல்வன் திட்ட கருத்தரங்கம் நடைபெற்றது.
சமயபுரம் டோல்கேட் அருகில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று திருச்சி மண்டல அளவிலான நான் முதல்வன் திட்ட கருத்தரங்கம் நடைபெற்றது. திருச்சி மண்டலத்தில் உள்ள திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 75 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் பொருட்டு அனைத்து பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்காக இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது.
இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் காணொலிக் காட்சி வாயிலாக சிறப்புரையாற்றினார். அதில் தமிழக முதல்-அமைச்சரால் கொண்டு வரப்பட்ட "நான் முதல்வன்" திட்டத்தை பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நிறைவேற்றும் பொறுப்பு கல்லூரி முதல்வர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் இருக்கிறது. ஆன்லைனில் பயிலும் மாணவர்களுக்கு தற்காலத்திற்கேற்ப பாடத்திட்டங்களும் மாற்றப்பட வேண்டும். மாணவர்களை வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை தருபவர்களாக மாற்ற வேண்டும். என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தொழில் நுட்பக் கல்வித் துறை ஆணையர் லெட்சுமிபிரியா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் இன்னசென்ட் திவ்யா, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் சீனிவாசன், திருச்சி பாரத மிகுமின் நிறுவன செயல் இயக்குனர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.