நான் முதல்வன் மாணவர் வழிகாட்டி கல்லூரி கனவு கலந்தாய்வு கூட்டம்


நான் முதல்வன் மாணவர் வழிகாட்டி கல்லூரி கனவு கலந்தாய்வு கூட்டம்
x

நான் முதல்வன் மாணவர் வழிகாட்டி கல்லூரி கனவு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூரில், மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் நான் முதல்வன் மாணவர் வழிகாட்டி கல்லூரி கனவு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி கல்வித்துறையின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி, கூட்ட பொருள் சார்ந்த முக்கியத்துவத்தை எடுத்து கூறினார். பள்ளி முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) சுரேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னதாக 2022-23-ம் கல்வி ஆண்டு பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளையும் உயர் கல்வி பயில வழிகாட்டவும், தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் தேர்வு எழுதாத இடைநின்ற மாணவர்களையும் தொடர்பு கொண்டு உடனடி தேர்வில் பங்கேற்க செய்து, தேர்ச்சி பெற்ற பின் மீண்டும் இதே ஆண்டில் உயர்கல்வி பயிலவும் பணியாற்ற கேட்டுக்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் செயல்படும் நான் முதல்வன் மாணவர் வழிகாட்டி உதவி குழு மையத்தில் நடைபெறும் செயல்பாடுகள், அவற்றின் முன்னேற்றம், தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டிய செயல்பாடுகள், மாணவர் வழிகாட்டி குழு உறுப்பினர்களின் பங்குகள் மற்றும் பணிகள், அரசின் நலத்திட்டங்கள், உதவித்தொகை, மாணவர்களின் உயர் கல்வி சார்ந்த படிப்புகள், வேலை வாய்ப்புகள், உயர் கல்வி உதவித்தொகைகள், வங்கி கடன் வாய்ப்புகள், மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்களின் பணிகள், தலைமை ஆசிரியர்கள் தினந்தோறும் பள்ளி இணையத்தில் மாணவர்கள் வழிகாட்டி சார்ந்த பதிவு செய்ய வேண்டியவை ஆகியன சார்ந்தும் எடுத்துரைக்கப்பட்டன. பள்ளி இறுதி தேர்வு முடித்து உயர் கல்வி பயிலும் மாணவர்களின் விழுக்காடு 100-ஐ எட்ட உறுதியேற்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட புள்ளியியல் அலுவலர் பால நாராயணன், ஒன்றிய வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், நான் முதல்வன் உட்கூறினை கண்காணிக்கும் ஆசிரியர் பயிற்றுனர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story