'தந்தை சொல்படி நடப்பதால் வென்றபடியே இருக்கிறேன்' முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவுபெற்றதையடுத்து கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை,
கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க. தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிந்து, 5-வது ஆண்டு தொடங்கி உள்ளது. இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தி.மு.க. தலைவராக 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கோபாலபுரம் வீட்டுக்கு சென்று அங்குள்ள கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கருணாநிதி நினைவிடம்
பின்னர் அவர் மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, முத்துசாமி, சேகர்பாபு உள்பட பலர் உடன் இருந்தனர்.
உங்கள் சொல்படி நடக்கிறேன்
5-ம் ஆண்டு தொடக்கத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை நினைவு கூர்ந்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தகைசால் தந்தையே, தன்னிகரற்ற தலைவரே. முதல்வர்களில் மூத்தவரே, கலையுலக வேந்தரே. எங்களின் உயிரே, உணர்வே. தாங்கள் வகித்த தி.மு.க. தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்து 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.
ஒவ்வொரு அடியும்-நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொல்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன். மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.