நான் யாரையும் மிரட்டியும் வீடியோ எடுக்கவில்லை பாதிரியாரின் பகீர் வாக்குமூலம்..!


நான் யாரையும் மிரட்டியும் வீடியோ எடுக்கவில்லை பாதிரியாரின் பகீர் வாக்குமூலம்..!
x

பாதிரியார் இளம்பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி

குமரி மாவட்டம் விளவங்கோடு பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29), பாதிரியார். இவர் குமரி மாவட்டத்தில் உள்ள சில ஆலயங்களில் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் சில இளம்பெண்களுடன் இவர் ஆபாசமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் இளம்பெண்களுடன் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தல், வாட்ஸ் அப் வீடியோ காலில் பாதிரியார் நிர்வாணமாக பேசுதல், ஆபாச சாட்டிங், இளம்பெண்களின் ஆபாச காட்சிகள் என பரவி முகம் சுளிக்கும் வகையில் இருந்தது.

இந்த பாதிரியார் ஆலய பணிக்காக மதுரை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். அங்கும் ஆலயங்களுக்கு வரும் இளம்பெண்களை மயக்கி தனது வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மிரட்டியதாக தெரிகிறது.

இதற்கிடையே பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய நர்சிங் மாணவி ஒருவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தன்னை பாலியல் ரீதியாக சமூக வலைத்தளம் மூலம் பாலியல் தொல்லை கொடுப்பது, மிரட்டுவது போன்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் பெனடிக்ட் ஆன்றோ மீது சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விவகாரம் விஸ்வரூபமானதை அறிந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ போலீசுக்கு பயந்து தலைமறைவானார். எனவே அவரை பிடிக்க சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் உத்தரவின்படி 2 தனிப்படை அமைக்கப்பட்டு தமிழகம், பெங்களூரு மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் தேடினர்.

இந்தநிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்த போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தேடினர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பினார். இதனை தொடா்ந்து அவர் கேரளாவுக்கு சென்று தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.

போலீசாரிடம் சிக்கி விடாமல் இருக்க தன்னுடைய இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இறுதியில் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு நேற்றுமுன்தினம் இரவு ரகசிய தகவல் வந்தது. உடனே நள்ளிரவில் அங்கு விரைந்த போலீசார் பெனடிக்ட் ஆன்றோவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் நாகா்கோவிலில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை அழைத்து வந்து விசாரித்தனர். முதலில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ போலீசாரிடம் எந்தவொரு தகவலையும் அளிக்காமல் மழுப்பலாகவே பதிலளித்தார்.

இதனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணை தொடங்கியது. அதில், நான் எந்த பெண்ணையும் பாலியல் ரீதியாக மிரட்டவில்லை என தெரிவித்தார். மேலும் போலீசார் அவரிடம், செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்ட இளம்பெண்களின் ஆபாச படங்கள் மற்றும் அவர் நிர்வாணமாக இருக்கும் படம் போன்றவற்றை காட்டி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளனர்.

இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு மவுனமாகவும், ஒரு சில கேள்விக்கு மட்டும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ வாக்குமூலம் அளித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடா்ந்து நேற்று மதியம் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ முதலில் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இப்படி ஊர் ஊராக சென்று பதுங்கி தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ போலீசாருக்கு டிமிக்கி கொடுக்க அடிக்கடி சிம்கார்டை மாற்றியுள்ளார்.

தலைமறைவாக இருந்த நாட்களில் மட்டும் 3-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை அவர் புதிதாக வாங்கி பயன்படுத்தியுள்ளார். இதனால் பாதிரியாரை பிடிப்பதில் சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலாக இருந்தது. ஆனாலும் போலீசாரின் நுண்ணறிவு புலனாய்வு விசாரணை மூலம் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ சிக்கினார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பெனடிக்ட் ஆன்றோ பல்வேறு அதிர்ச்சி தகவல் தெரிவித்தார். அதில், லேப்டாப்பில் இருந்த பெண்களின் புகைப்படங்கள், வீடியோவை நான் வெளியிடவில்லை.

நான் யாரையும் மிரட்டியும் வீடியோ எடுக்கவில்லை. அவர்களுக்கு தெரியாமல், அவர்கள் விரும்பாமல் எதையும் நான் செய்ததில்லை என கூறி உள்ளார்.

வீடியோவில் இருந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால் பாதிரியார் என்பதால் திருமணம் செய்ய முடியாது இதையடுத்து எனது பாதிரியார் பதவியை ராஜினாமா செய்து விட்டு திருமணம் செய்யலாமா என்று நினைத்தேன். ஆனால் வீட்டில் ஒப்பு கொள்ளவில்லை. இதையடுத்து நாங்கள் இருவரும் பேசி பிரிந்து விட்டோம். அதன்பிறகு அந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடந்தது. அதன் பிறகு எங்களுக்கிடையே எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை சைபர் கிரைம் போலீசார் காவல் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். பாதிரியாரை காவலில் எடுத்து விசாரித்தால் தான் முழு விவரமும் தெரிய வரும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிரியாரால் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே லேப்டாப், செல்போனை கைப்பற்றிய போலீசார் அதிலிருந்து பல ஆதாரங்களை திரட்டி உள்ளனர். அது தொடர்பான முழு விவரங்களை திரட்டும் வகையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவல் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.


Next Story