''கவர்னர் ஒப்புதல் அளிக்காததற்கு காரணம் தெரியவில்லை''


கவர்னர் ஒப்புதல் அளிக்காததற்கு காரணம் தெரியவில்லை
x

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததற்கு காரணம் தெரியவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் காலாவதி ஆன நிலையில் நிரந்தர சட்டத்திற்கான மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டையில் நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் நேற்று முதல் (அதாவது நேற்று முன்தினம்) காலாவதியாகி விட்டது. அவசர சட்டத்திற்கு உடனடியாக கவர்னர் ஒப்புதல் தந்தார். அதில் இருக்கும் ஷரத்துக்கள் தான் இப்போது நிரந்தர சட்டத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.

சில சந்தேகங்கள் கேட்கப்பட்டதற்கு 24 மணி நேரத்திற்குள் பதில் அளித்தோம். அதனால் நேற்று மாலைக்குள் (அதாவது நேற்று முன்தினம்) ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் கவர்னர் ஒப்புதல் கிடைக்கவில்லை.

மற்ற சட்டங்களில் நடவடிக்கை

கவர்னர் கேட்ட சந்தேகங்களுக்கு முகப்புரையில் தெளிவாக கூறியுள்ளோம். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய ஆதரவாக 95 சதவீத பொதுமக்கள் பதிவிட்டிருக்கிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தை உலக சுகாதார நிறுவனம் ஒரு நோய் என அறிவித்திருக்கிறது. இந்த நோயை ஒழிக்க வேண்டியது தலையாய பணி. அதைத்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செய்திருக்கிறது. புதிய சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது ஏன்? என தெரியவில்லை.

அதற்கான காரணம் அவருக்கு (கவர்னர்) தான் தெரியும். அவசர சட்டம் காலாவதி ஆன நிலையில், ஏற்கனவே அமலில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்க முடியும். எனவே இந்த சட்டத்திற்கு அனுமதி கிடைத்தால் இந்த சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இல்லையெனில் அமலில் உள்ள மற்ற பல்வேறு சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கையை தொடருவோம்.

கவர்னரை கேள்வி கேட்கும்...

புதிய சட்டத்திற்கு கவர்னர் எப்போது ஒப்புதல் அளிக்கிறாரோ, அன்றைய தினம் முதல் அமல்படுத்த முடியும். சட்ட முன்வடிவுக்கு கவர்னர் கையெழுத்திட்டால் அதற்கு உயிர் இருக்கிறது. புதிய சட்டம் வந்த பிறகு அச்சட்டம் தொடர்பாக ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தினர் கோர்ட்டில் எதிர்ப்பு தெரிவித்து நாடலாம். ஆனால் அதற்கு நாங்கள் வாய்ப்பு தரவில்லை.

புதிய சட்டம் ஒப்புதல் அளிக்கும் விவகாரம் தொடர்பாக கவர்னரிடம் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. புதிய சட்டம் நிறைவேற்றாவிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியும். கவர்னரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது. அவர் கேள்வி கேட்டால் பதில் சொல்கிற உரிமை தான் எங்களுக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story