குடித்து விட்டு தாயை துன்புறுத்தியதால் தந்தையை கொலை செய்தேன்


குடித்து விட்டு தாயை துன்புறுத்தியதால் தந்தையை கொலை செய்தேன்
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

3 மாதங்களுக்கு முன்பே அரிவாளை வாங்கி வைத்தோம். குடித்து விட்டு தாயை துன்புறுத்தியதால் தந்தையை கொலை செய்ததாக கைதான வாலிபர் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

3 மாதங்களுக்கு முன்பே அரிவாளை வாங்கி வைத்தோம். குடித்து விட்டு தாயை துன்புறுத்தியதால் தந்தையை கொலை செய்ததாக கைதான வாலிபர் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

தொழிலாளி வெட்டிக்கொலை

பொள்ளாச்சி அருகே உள்ள கரப்பாடியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 48) கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா தேவி இவர்களது மகன் கார்த்திக் (24). இவர் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் சிவலிங்கத்திற்கு குடிப்பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் மனைவி சித்ராதேவியிடம் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதை அவரது மகன் கார்த்திக் கண்டித்து உள்ளார். ஆனால் சிவலிங்கம் தினமும் தகராறு செய்து வந்ததால் கார்த்திக்கிற்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 27-ந்தேதி பூசாரிபட்டியில் உள்ள மதுக்கடை முன்பு சிவலிங்கத்தை அரிவாளால் வெட்டி கார்த்திக் கொலை செய்தார். பின்னர் அவர் போலீசில் சிக்காமல் இருக்க தலைமறைவானார். இதுகுறித்த புகாரின் பேரில் கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தேனிக்கு சென்று அரிவாள் வாங்கினர்

மேலும் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கொலையில் கார்த்திக்கின் நண்பர்களான ஏ.நாகூரை சேர்ந்த சங்கீத் (20), தேனியை சேர்ந்த குமார் (28) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையில் போலீசார் 3 பேரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததில், தேனி மாவட்டத்தில் 3 பேரும் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கோமங்கலத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பின்னர் கைதான கார்த்திக் கொடுத்த வாக்குமூலம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

தந்தை சிவலிங்கம் அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் தாயிடம் தகராறு செய்து வந்தார். இதை நான் பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து குடித்து விட்டு தாயை துன்புறுத்தியதால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்கிடையில் தேனியில் இருந்து கட்டிட வேலைக்காக கொல்லப்பட்டி வந்த குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன் தேனிக்கு அரிவாள் வாங்குவதற்கு சென்றோம். அங்கு கிடா வெட்டுவதற்கு அரிவாள் வேண்டும் என்று கூறி, அரிவாளை வாங்கி வந்தோம். சம்பவத்தன்று மதுக்கடைக்கு சென்று மது அருந்தி விட்டு வெளியே வந்த போது எனது தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story