வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியதால் சித்தப்பாவை கொன்றேன்
பெற்றோரை வெட்டியதற்காக போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியதால் சித்தப்பாவை கொன்றேன் என கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மேலகிருஷ்ணன்புதூர்:
பெற்றோரை வெட்டியதற்காக போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியதால் சித்தப்பாவை கொன்றேன் என கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
குத்திக் கொலை
சுசீந்திரம் அருகே குலசேகரன்புதூர் அடுத்த கொத்தன்குளத்தை சேர்ந்தவர் செல்லையா தாஸ். இவருடைய மூத்த மகன் காஸ்டின். இளைய மகன் சுரேஷ் (வயது 45).
காஸ்டின் மகன் அருண் ஜெனிஷ் (24). நேற்றுமுன்தினம் இரவு அருண் ஜெனிஷ், சித்தப்பா சுரேசுடன் கொத்தன்குளத்தில் உள்ள நூலகத்தில் மதுகுடித்த போது திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஜெனிஷ் கத்தியை எடுத்து சுரேஷை ஓட, ஓட விரட்டி குத்திக் கொலை செய்தார். அருண் ஜெனிஷின் தந்தை காஸ்டின், மனைவி சரஸ்வதியை சொத்து தகராறில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுரேஷ் வெட்டியுள்ளார். இதற்கு பழிவாங்கும் நோக்கில் அருண் ஜெனிஷ் அவரை தீர்த்துக் கட்டியது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
வாலிபர் கைது
இதனை தொடர்ந்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அருண் ஜெனிஷ், சுரேஷை தீர்த்துக் கட்டியது ஏன்? என்பது குறித்து போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
பரபரப்பு வாக்குமூலம்
என்னுடைய தந்தை, தாயை முன்விரோதம் காரணமாக சுரேஷ் அரிவாளால் வெட்டினார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இந்தநிலையில் இந்த வழக்கை வாபஸ் பெறும்படி என்னிடம் சித்தப்பா சுரேஷ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூறினார்.
அப்போது இந்த விஷயம் குறித்து தந்தையிடம் பேசலாமே என கூறினேன். இதில் கோபமடைந்த அவர் இந்த வழக்கை வாபஸ் பெறவில்லையென்றால் உங்களுடைய குடும்பத்தில் உள்ள ஒருவரையும் உயிரோடு விட மாட்டேன் என மிரட்டினார்.
இந்த வார்த்தை சித்தப்பா மீது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இவரை உயிரோடு விடக்கூடாது என நான் முடிவு செய்தேன். இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன். அதன்படி சித்தப்பா சுரேசும் நானும் எதிர்பாராமல் சந்தித்த போது மதுகுடிக்க நூலகத்திற்கு சென்றோம். அப்போது மீண்டும் வழக்கை வாபஸ் பெறும்படி அவர் தெரிவித்தார். உடனே நான் நூலகத்தில் இருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்திக் கொன்றேன்.
இவ்வாறு அருண் ஜெனிஷ் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அருண் ஜெனிஷை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.