மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை


மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
x

காலம் கடந்து செய்தாலும், கண்துடைப்புக்காக செய்தாலும், மத்திய அரசு கொண்டு வரும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் மீது பா.ஜ.க.வுக்கு உண்மையான அக்கறை இருந்திருக்குமானால், ஆட்சிக்கு வந்ததும் இதனை கொண்டு வந்திருப்பார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தோல்வி பயம் பா.ஜ.க.வினரை வாட்டி வரும் நிலையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி-ஒரு சாதனையைச் செய்துவிட்டதாக காட்டிக்கொள்கிறார்கள்.

2016-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி மகளிர் நாள் அன்று நாடாளுமன்றத்தின் மக்களவை - மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்து பெண் எம்.பி.க்கள் அனைவரும் சேர்ந்து இதற்காக குரல் கொடுத்தார்கள். 'அப்போது பா.ஜ.க. அரசு வாய் திறக்கவில்லை.

பாலின சமத்துவம் என்பது அனைத்து வகையிலும், அனைத்து இடங்களிலும் பெண்ணுக்கு உரிய அதிகாரத்தை வழங்குவது ஆகும். அதற்கு முதலில் அவர்களுக்கு உரிய இடங்களை வழங்க வேண்டும். இதையே தொடர்ந்து தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. ஆட்சி அமையும் போதெல்லாம் செயல்படுத்திக் காட்டியும் வருகிறது.

தி.மு.க. அரசின் திட்டங்கள்

தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமமைச் சட்டம். பெண் காவலர்கள் நியமனம், அரசு பணியிடங்களில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு. உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு. பெண்கள் தம் சொந்தக்காலில் நிற்க வசதியாக மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்தது. ஒடுக்கப்பட்ட சமூக பெண்களுக்கு முதலில் பள்ளிக்கல்வி வரை இலவச கல்வியும், அதன் பிறகு கல்லூரி வரை இலவச கல்வியும் வழங்கப்பட்டது.

ஒன்று முதல் 5 வரையிலான அரசு பள்ளி ஆசிரியர்களாக மகளிரை நியமித்த அரசு தி.மு.க. அரசு. கிராமப்புற பெண்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை கொடுத்தது தி.மு.க. அரசு. மகளிருக்கு பஸ்களில் கட்டணமில்லா பயணம். மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை ஆகிய பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டியது தி.மு.க. அரசு.

வரவேற்கிறேன்,ஆதரிக்கிறேன்

33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி 2017-ம் ஆண்டு தி.மு.க சார்பில் மகளிரணிச் செயலாளரும், அப்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில் டெல்லியில் பேரணி நடத்தினோம். 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும். ராஜீவ்காந்தி உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை உறுதி செய்தார்.

நாடாளுமன்ற - சட்டமன்றங்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து வெற்றி பெற வைத்தார் மன்மோகன் சிங். இவர்கள் இருவரது சாதனைகளும் இப்போது நினைவு கூரப்பட வேண்டியவை.

காலம் கடந்து செய்தாலும், கண்துடைப்புகாகச் செய்தாலும், இப்போதைய பிரச்சினைகள் அனைத்தையும் திசைதிருப்பச் செய்தாலும், மத்திய அரசு கொண்டு வரும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன். பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையை புறந்தள்ளாமல், அதன் நியாயத்தை பரிசீலிக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை இன்னும் நடத்தாத ஒரே நாடு இந்தியா. எப்போது நடைபெறும் என்று தெரியாத மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதன் அடிப்படையில் நடக்கவுள்ள தொகுதி மறுவரையறை - அதன் பேரில் 2029 தேர்தலில் நடைமுறைக்கு வரும் மகளிர் ஒதுக்கீட்டுக்கு இப்போது சட்டம் இயற்றும் விசித்திரம் பா.ஜ.க.வால் அரங்கேற்றப்படுகிறது.

தலைக்கு மேல் தொங்கும் கத்தி

தமிழ்நாட்டின் மீது - தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தென்னிந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கிற அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

மகளிர் மசோதாவை வரவேற்கும் அதே வேளையில், மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கி, தென்னிந்திய மக்களை ஆட்கொண்டுள்ள அச்சத்தைப் போக்கிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story