"எத்தனை இடையூறுகள் வந்தாலும் எனது பணியை தொடர்ந்து செய்வேன்" - தமிழிசை சவுந்தரராஜன்
தனது 3 ஆண்டுகால பணிகள் குறித்த புத்தகம் ஒன்றை புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.
சென்னை,
தெலங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் தனது 4-வது ஆண்டு பணியை தொடங்கியுள்ள நிலையில், அவரது 3 ஆண்டு கால பணிகள் குறித்த புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 'ரீ-டிஸ்கவரிங் செல்ஃப் இன் செல்ஃப்லெஸ் சர்வீஸ்' என பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தமிழிசை சவுந்தரராஜன் புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"எனது பணியில் நான் யாருக்கும் இடையூறு செய்ததில்லை. ஆனால் எனது பணிகள் இடையூறாக இருப்பதாக ஆட்சியாளர்கள் சில நேரங்களில் நினைத்து விடுகின்றனர். என்னை குடியரசு தினத்தன்று கொடியேற்ற விடவில்லை. ராஜ் பவன் வளாகத்திற்குள் நான் கொடியேற்றிக் கொண்டேன். சில காரணங்களால் என்னை கவர்னர் உரையாற்றவும் விடவில்லை.
ஆனால் எனது பணிகளில் நான் எந்தவித இடைவெளியையும் விடவில்லை. எத்தனை இடையூறுகள் வந்தாலும் எனது பணியை தொடர்ந்து செய்வேன். நான் புதுச்சேரியில் முழுமையாக பணியாற்றுகிறேன். புதுச்சேரியிலும் முழுமையாக பணியாற்றுகிறேன். தமிழகத்தில் முழுமையான அன்பைச் செலுத்துகிறேன்."
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.