எப்போது வேண்டுமானாலும் விழுவேன்!


எப்போது வேண்டுமானாலும் விழுவேன்!
x
தினத்தந்தி 23 May 2023 12:45 AM IST (Updated: 23 May 2023 8:08 PM IST)
t-max-icont-min-icon

எப்போது வேண்டுமானாலும் விழுவேன்!

கோயம்புத்தூர்

வீதிகள் வெளிச்சம் பெற்று இருக்க மின் கம்பங்கள் அவசியமாகின்றன. இந்த மின் கம்பங்கள் பல ஆண்டுக்கணக்கில் மழைக்கும், வெயிலுக்கும் நின்று கொண்டிருந்தால் சேதம் அடைந்து விடுகின்றன. இவற்றை அவ்வப்போது கண்காணித்து மின்வாரிய ஊழியர்கள் மாற்றிக்கொண்டு இருந்தாலும், இன்னும் பல்வேறு இடங்களில் மாற்ற வேண்டிய மின் கம்பங்கள் இருக்கத்தான் செய்கின்றது.

இதை மாற்றக்கோரி அந்த பகுதிமக்களின் கோரிக்கைகளும் இருந்து கொண்டே இருக்கிறது.

இது ஒருபுறம் இருந்தாலும்....புதிதாக இணைப்பு கொடுக்கும் பகுதிகளில் புதிய மின்கம்பங்களை நாட்டி உடனுக்குடன் மின் இணைப்புகளை கொடுப்பதில் மின்வாரியம் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கோவை வடக்கு, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், பன்னீர் மடை கிராமம், ரோஸ் கார்டனில் உள்ள ஒரு தெருவில் அரை, குறையாய் மண்ணில் புதைக்கப்பட்ட மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் தவறி கீழே விழும் நிலையில், மக்களை அச்சுறுத்தும் வகையில் அபாயகரமாக உள்ளது.

இதனால் அவ்வழியே செல்லும் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும், அவ்வழியே செல்லும் போது ஒருவித பதற்றத்துடனேயே சென்று வருகின்றனர். இது குறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், எப்போது வேண்டுமானாலும் விழுவேன் என்கிற நிலையில் இந்த மின் கம்பம் மிரட்டுகிறது. ஆகவே இதனை உடனுக்குடன் சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story