'என் சொத்து விவரங்களை விரைவில் வெளியிடுவேன்' தி.மு.க. தலைவர்கள் வெளியிட தயாரா என அண்ணாமலை கேள்வி
‘என் சொத்து விவரங்களை விரைவில் வெளியிடுவேன். தி.மு.க. தலைவர்கள் வெளியிட தயாரா?', என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, கடந்த ஆண்டு மே மாதம் வாங்கிய எனது ரபேல் கைக்கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கி கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்டு 2011-ம் ஆண்டு முதல் ஐ.பி.எஸ். அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம், எனக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது பிரதமர் நரேந்திர மோடியை போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.
அன்றைய தினம் நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விவரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன்.
அரசிடம் ஒப்படைக்க தயார்
நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துகள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்.
இதேபோல, வருமான விவரங்களையும், அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் தி.மு.க.வினர் மற்றும் தி.மு.க. தலைவர்கள், தமிழக சகோதர-சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா?.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.