பரந்தூர் விமான நிலைய பணிக்காக நடப்படும் முதல் கல்லை நான் எடுத்துச் சென்று விடுவேன் - சீமான்
பரந்தூர் விமான நிலைய பணிக்காக நடப்படும் முதல் கல்லை நான் எடுத்துச் சென்று விடுவேன் என சீமான் கூறியுள்ளார்.
பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் கண்டன பொதுக்கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் பல்வேறு இடங்களை சேர்ந்த எம்மக்களை இலங்கை கண்டி, நுரேலியா உள்ளிட்ட பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் கடும் உழைப்பு இன்று வரை சுரண்டப்படுகிறது. அவர்கள் தேயிலை தோட்டங்களில் படும்பாட்டை கண்டு தேநீர் குடிப்பதை நிறுத்தி விட்டேன்.
வனப்பகுதியில் எங்கு பார்த்தாலும் தேக்கு மரங்கள் உள்ளது. இதனால் வனவிலங்குகளுக்கு எந்த பயனும் இல்லை. வரும் வழியில் சாலையோரம் குரங்குகள் கூட்டமாக நின்று உணவு கிடைக்குமா என பிச்சை எடுப்பது போல் நிற்கிறது.
வன விலங்குகளுக்கு தேவையான உணவுகளை வனத்தில் பெருக்க நடவடிக்கை எடுப்பதில்லை. மண்ணின் மைந்தர்களான தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தினச் சம்பளம் ரூ.425.50 வழங்க வேண்டும். டேன் டீ தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைத்தால் 2 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
இதேபோல் பரந்தூர் விமான நிலைய பணிக்காக நடப்படும் முதல் கல்லை நான் எடுத்துச் சென்று விடுவேன். சொந்த விமானங்கள் இல்லாத நிலையில் எதற்காக 5 ஆயிரம் கோடியில் விமான நிலையம் கட்ட வேண்டும். டேன் டீ தோட்டங்களை அரசே நடத்த வேண்டும்.
தொழிலாளர்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றக் கூடாது. தொழிலாளர்களின் உழைப்பால் லாபகரமாக இயங்க முடியும். அவ்வாறு மீறி வனத்துறையிடம் ஒப்படைத்தால் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்படும். அதை உறுதியாக போராடி தடுப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.