தமிழக அரசு வேலை வழங்கியது மகிழ்ச்சி;யானைகளை சிறப்பாக பராமரிப்பேன்-பெள்ளி நெகிழ்ச்சி
தமிழக அரசு வேலை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், முதுமலை முகாமில் வளர்ப்பு யானைகளை சிறப்பாக பராமரிப்பேன் என்றும் பணி நியமனம் பெற்ற பெள்ளி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கூடலூர்: தமிழக அரசு வேலை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், முதுமலை முகாமில் வளர்ப்பு யானைகளை சிறப்பாக பராமரிப்பேன் என்றும் பணி நியமனம் பெற்ற பெள்ளி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பாகன் தம்பதிக்கு பாராட்டு
முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் தெப்பக்காடு முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் வனத்தில் தாயை பிரிந்து தவித்த ரகு, பொம்மி குட்டி யானைகளை பராமரிக்கும் பணியில் பாகன் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதில் பெள்ளி தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார்.
மேலும் குட்டி யானைகள் ரகு, பொம்மி மற்றும் பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததால் சர்வதேச அளவில் பாகன் தம்பதி பிரபலம் அடைந்து பாராட்டுகளை பெற்றனர். இவர்களை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் முதுமலைக்கு நேரில் வந்து பாராட்டினார். இதேபோல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்து பரிசுத்தொகை அளித்தார்.
பெண் யானை பராமரிப்பாளர்
இந்த நிலையில் பொம்மன் - பெள்ளி அழைப்பின் பேரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை(5-ந் தேதி) முதுமலைக்கு வருகிறார். இதற்கிடையே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் பெள்ளியை தமிழகத்தின் முதல் பெண் யானை பராமரிப்பாளராக நியமனம் செய்து அதற்கான ஆணையை வழங்கினார். இதுகுறித்து பெள்ளி கூறியதாவது:-
சிறப்பாக பராமரிப்பேன்
முகாமில் எனது கணவருடன் தற்காலிக பணியாளராக குட்டி யானைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தேன். இப்பணி எனக்கு மிகவும் பிடிக்கும். குட்டி யானைகளை எங்களது பிள்ளைகளைப் போல் கவனித்து வந்தோம். இதனால் எங்களுக்கு பெருமை கிடைத்துள்ளது. தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், என்னை முதல் பெண் யானை பராமரிப்பாளராக பணி நியமனம் செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.இதனால் தமிழக அரசுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் முகாமில் உள்ள யானைகளை சிறப்பாக பராமரிப்பேன். மேலும் எங்கள் அழைப்பின் பேரில் ஜனாதிபதியும் வருவது சந்தோசமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.