"நண்பர் விஜயகாந்த் விரைவில் நலம்பெற விழைகிறேன்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


நண்பர் விஜயகாந்த் விரைவில் நலம்பெற விழைகிறேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

நீரிழிவு நோயால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் விரல் அகற்றப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். அவரது பெயரில் அறிக்கைகள் மட்டும் வெளி வந்து கொண்டிருக்கின்றன. விஜயகாந்த் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக செல்வது வழக்கம். சமீபத்தில் விஜயகாந்த் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிசிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நண்பர் விஜயகாந்த் விரைவில் நலம்பெற விழைகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story