ஆதியோகி சிலை முன்பு ஷாரிக் 'செல்பி' எடுத்ததை நேரில் பார்த்தேன்
கோவை ஈஷா மையத்தில் ஆதியோகி சிலை முன்பு ஷாரிக் செல்பி எடுத்ததை நேரில் பார்த்தேன் என்று கால்டாக்சி டிரைவர் பரபரப்பு பேட்டியளித்து உள்ளார்.
கோவை
கோவை ஈஷா மையத்தில் ஆதியோகி சிலை முன்பு ஷாரிக் செல்பி எடுத்ததை நேரில் பார்த்தேன் என்று கால்டாக்சி டிரைவர் பரபரப்பு பேட்டியளித்து உள்ளார்.
மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இதில் வெடிகுண்டை கொண்டு சென்ற பயங்கரவாதி ஷாரிக் படுகாயம் அடைந்தார். இதனைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளும் மங்களூருவில் முகாமிட்டு விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வரும் பயங்கரவாதி ஷாரிக் கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் 4 நாட்கள் தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் ஷாரிக் தனது செல்போன் வாட்ஸ் அப்பில் முகப்பு படமாக (டி.பி. இமேஜ்) ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையை வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதியோகி சிலை முன்பு செல்பி
இந்த நிலையில் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்த ஷாரிக், ஆதியோகி சிலையை புகைப்படம் எடுத்ததை நேரில் பார்த்ததாக செட்டிப்பாளையத்தை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ஆனந்த் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த மாதம் 23-ந் தேதி (தீவாவளிக்கு முந்தைய நாள்) தனியார் ஓட்டலில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஈஷா யோகா மையத்திற்கு சவாரி சென்று இருந்தேன். என்னுடன் வந்தவர்கள் அங்கே தங்கியதால், நானும் அங்கு தங்கினேன். மறுநாள் 24-ந் தேதி ஆதியோகி சிலை அருகே உள்ள கேன்டீனுக்கு சென்றேன். அப்போது தங்க நிற குல்லா அணிந்து கொண்டு ஒருவர் ஆதியோகி சிலை முன்பு 'செல்பி' எடுத்துக்கொண்டிருந்தார். அவருடன் 2 பேர் இருந்தனர். பின்னர் அங்கிருந்து நான் சென்றுவிட்டேன்.
கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும்
பின்னர் சில நாட்களுக்கு முன்பு மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு குறித்து, டி.வி. மற்றும் பத்திரிகையில் படித்தேன். அப்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஷாரிக்கை ஈஷா யோகா மையத்தில் பார்த்தது நினைவுக்கு வந்தது. இதற்கிடையில், நான் ஷாரிக்கை பார்த்ததை அறிந்த போலீசார் என்னிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் எனக்கு தெரிந்ததை கூறினேன்.
ஆதியோகி சிலை முன்பு கேன்டீனில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தால் ஷாரிக் வந்து சென்றது தெரியவரும். இதுபோன்று நான் வெளிப்படையாக கூறுவதால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போலீசார் எனக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
உண்மை தானா?
அதேசமயம் கால்டாக்சி டிரைவர் ஆனந்த் கூறும் தீபாவளியன்று ஷாரிக் பயன்படுத்திய செல்போன் சிக்னலை வைத்து மங்களூரு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஷாரிக் கர்நாடகாவில் இருந்ததாக செல்போன் சிக்னல் மூலம் தெரிகிறது. இதனால் கால்டாக்சி டிரைவர் கூறும் தகவல்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர் கூறுவது உண்மைதானா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.