தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்கும் ஆர்வம் அதிகரிக்குமா?


தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்கும் ஆர்வம் அதிகரிக்குமா? என மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

தமிழ்நாடு சட்டசபையில் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 20-ந்தேதி தாக்கல் செய்தார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப்பணி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் அதில் இடம்பெற்று இருந்தது.

அதன்படி, தமிழ்நாட்டில் இருந்து இந்திய குடிமைப் பணி தகுதித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

ரூ.10 கோடி நிதி

முதல் நிலைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500-ம், முதன்மைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் தமிழக அரசின் அண்ணா மேலாண்மை நிலையம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த மையம் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இங்கு இளநிலை உதவியாளர்கள் முதல் இந்திய ஆட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறுபிரிவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் உதவித்தொகை குறித்து, தேர்வு எழுத தயாராகி வரும் மாணவர்கள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

வரவேற்பு

குடிமைப்பணியில் முதல் நிலைத்தேர்வு எழுத இருக்கும் ராஜபாளையத்தை சேர்ந்த குருலட்சுமி கூறும் போது மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக தற்போது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் தற்போது தமிழக அரசு உதவித்ெதாகை அறிவித்து இருப்பது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். எழுதுபவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வழிவகுக்கும். குடிமைப்பணி தேர்வு குறித்து இன்னும் நிறைய மாணவர்களுக்கு தெரியவில்லை. ஆதலால் இந்த தேர்வு குறித்து தொடக்கக்கல்வி முதல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு அறிவித்த உதவித்தொகை திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை மிகவும் பயனுள்ள வகையில் அமைந்து வெற்றி பெறும் மாணவர்களின் சதவீதம் அதிகரிக்கும்.

ஆர்வம் அதிகரிக்கும்

குடிமைப்பணியில் முதல்நிலைத்தேர்வை எழுத இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தாரணி கூறுகையில் உதவித்தொகை உயர்வு என்ற அறிவிப்பு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உற்சாகத்தையும், தூண்டுதலையும் உண்டுபண்ணும். இந்த திட்டம் அனைத்து ஏழை மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மாணவர்களாகிய நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம். சென்னை. மதுரை, கோவை போன்ற முக்கியநகரங்களில் மத்திய அரசின்குடிமை பணி பயிற்சிகளுக்கு தங்கும் வசதிகளுடன் கூடிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் குடிமைப்பணி தேர்வு எழுதும் மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கும்.

முழு நேர பயிற்சி

தோ்வு எழுத இருக்கும் வத்திராயிருப்பை சேர்ந்த கவுதம் கூறுகையில்,

இந்த ஆண்டின் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள மத்திய குடிமைப்பணி தேர்வாணையம் நடத்தும் இந்திய குடிமைப்பணித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகை மிகவும் வரவேற்கத்தக்கது.

பல மாணவர்கள் கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடும், மக்களுக்கும், சமூகத்துக்கும் நம்மால் இயன்ற வரை நற்பணி புரிய வேண்டும் என்ற எண்ணங்களுடனும் இந்த குடிமை பணி தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார்கள். ஆனால் குடிமை பணி தேர்வுகளில் வெற்றி பெறுவது எளிமையான ஒன்று அல்ல.

பலரும் தங்கள் எதிர்காலத்தையும், இளமைப் பருவத்தையும் விலையாக கொடுத்தே இந்த தேர்வுகளுக்கு படிக்கிறார்கள். முழு நேர பயிற்சி வேண்டும் என்றே பலர் வேலைக்கு செல்லாமல் படிப்பை மட்டுமே வாழ்க்கையாக கருதி படிக்கின்றனர். கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இந்த தேர்வுகள் பல தடைகளை உருவாக்குகிறது. இந்தநிலையில் தமிழக அரசு அறிவித்திருக்கும் உதவித்தொகை மாணவர்களை ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை. இந்த அறிவிப்பிற்கு இந்திய குடிமை பணி தேர்வுகளுக்கு பயிலும் மாணவர்கள் சார்பில் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

அதிகரிக்க வாய்ப்பு

ராஜபாளையத்தை சேர்ந்த மாணவன் சிவமூர்த்தி கார்த்திகேயன்:- .ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற குடிமைப்பணி தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தற்போது உதவித்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

என்னை போன்ற தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது மேலும் ஊக்கத்தை தரும். அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் வெற்றி பெறும் சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வெற்றிக்கு வாய்ப்பு

குடிமைப்பணியில் பாதுகாப்பு உற்பத்தி துறை சிறப்பு செயலாளர் பா.கிருஷ்ணமூர்த்தி கூறும் போது, 'நான் கடந்த 2002-ம் ஆண்டு குடிமைப்பணி தேர்வு எழுதி அதில் பாதுகாப்பு துறையில் பணி இடத்தை பெற்று பணியாற்றி வருகிறேன். நாங்கள் படிக்கும் போது இதுபோன்ற நிதி உதவி திட்டங்கள் எதுவும் இல்லை. பெற்றோர்களை சார்ந்தே படித்து தேர்வுகளை எழுதினோம். இதுபோன்ற திட்டங்கள் அப்போது இருந்திருந்தால் விரைவாக வெற்றி பெற்று பணிகளுக்கு சென்றிருப்போம்.

பிற மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்கள் உள்ளது. நம்முடைய மாநிலத்தில் தற்போது மாணவர்களுக்கு அரசு பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் நிதி உதவி திட்டம் வரவேற்கத்தகுந்தது. இதன் மூலம் மாணவர்கள் பலர் பயனடைவதுடன், தேர்வுகளிலும் அதிகம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது' என்றார்.


Next Story