புதிதாக மதுகுடிக்க வருபவர்களை கண்டறிந்து கவுன்சிலிங்
புதிதாக மதுகுடிக்க வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டு உள்ளதாக கோவையில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார்.
கோவை
புதிதாக மதுகுடிக்க வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டு உள்ளதாக கோவையில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார்.
விலையில்லா சைக்கிள்
கோவை ஒண்டிபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் முத்துசாமி விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவை மாநகராட்சியில் ரூ.206 கோடி செலவில் 567 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன. மாவட்டம் முழுவதும் 15 ஆயிரத்து 270 சைக்கிள்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதில் தற்போது 7 ஆயிரம் சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. மீதம் உள்ள மாணவர்களுக்கும் சைக்கிள் வழங்கப்படும். மாணவர்களுக்கு சைக்கிள் ஓட்ட தெரியவில்லை என்றால் அவர்கள் சைக்கிள் ஓட்டி பழகுவதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்ய வேண்டும்.
அமலாக்கத்துறை சோதனை
அமலாக்கத்துறை தமிழகத்தில் ஏற்கனவே சோதனை நடத்தி இருக்கிறது. தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்துகிறது. இந்த சோதனையானது திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த சோதனையில் இருந்து அமைச்சர் பொன்முடி மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இதுபோன்ற சோதனையின் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்ப பார்க்கிறார்கள். இதுபோன்ற சோதனைகளை கண்டு நாங்கள் கவலைப்படுவது இல்லை. எங்களுடைய மக்களுக்கான பணி வழக்கம் போல் நடைபெறும்.
டாஸ்மாக் விவகாரத்தை பொறுத்தவரை முதலில் தொழிலாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசி அதற்கு தீர்வு காண இருக்கிறோம். மதுபானங்களை இறக்குவது குறித்து டாஸ்மாக் தொழிற்சங்கத்தினருடன் பேசி வருகிறோம். கோவைக்கு பெரிய அளவிலான வளர்ச்சி திட்டங்களை அரசு அதிகாரிகள் வகுத்து வருகின்றனர். கோவை மத்திய சிறைச்சாலை மைதானத்தில் செம்மொழி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கவுன்சிலிங்
டெட்ரா பேக் (பாக்கெட்) மூலம் மதுவிற்பனை செய்யும் திட்டம், 90 மி.லி. மதுபானம் கொண்டு வருவதும் பரிசீலனையில் தான் உள்ளது. இந்த திட்டம் வரலாம், வராமலும் போகலாம். இந்த அரசை பொறுத்தவரை காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்கும் எண்ணம் இல்லை.
கடினமான பணிகளை மேற்கொள்கிறவர்கள் தான் காலையில் மது குடிக்கிறார்கள். அவர்களை குடிகாரன் என்று சொல்வதை ஏற்க முடியாது. ஆகவே அவர்களை குறைசொல்வதை விடுத்து உரிய ஆலோசனை கூறுங்கள்.
புதிதாக குடிக்க வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க திட்டமிட்டு உள்ளோம். இதேபோல் வயதானவர்கள், உடல் மோசமான நிலையில் உள்ளவர்கள் குடிப்பதை தடுக்க கவுன்சிலிங் கொடுக்க உள்ளோம். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நூற்பாலைகள் உரிமையாளர்களிடம் அரசு தரப்பில் பேசி இருக்கின்றோம். அது தொடர்பான முடிவுகள் விரைவில் சொல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 72 மற்றும் 73-வது வார்டில் உள்ள பொன்னையராஜபுரம் பிரதான சாலை, சொக்கம்புதூர் சாலை, தெலுங்குவீதி, சுந்தரம் வீதி உள்ளிட்ட இடங்களில் ரூ.10 கோடியில் 21 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை சீரமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. இதில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.