அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சாலை விபத்துக்களை தடுக்க கூடுதல் கவனம் செலுத்த முதல்- அமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தொிவித்தார்.
சாலை விபத்துக்களை தடுக்க கூடுதல் கவனம் செலுத்த முதல்- அமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தொிவித்தார்.
குண்டர் சட்டத்தில் கைது
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பங்கேற்றார்.
இதுகுறித்து அவர் 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 40 சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 7 மகளிர் போலீஸ் நிலையங்கள், 1 குற்றவியல் போலீஸ் நிலையம், 3 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள், 4 கலால் போலீஸ் நிலையங்கள் என 54 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கை நிலை நாட்ட மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாராயம், கஞ்சா, குட்கா போன்றவை விற்பனை செய்பவர்கள் கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 83 பேர் குண்டர் சட்டத்தினால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மேலும் மாவட்டத்தில் அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அங்கு தடுப்புகள் அமைப்பது, வேகத்தடை அமைப்பது, ஒளி எதிரொலிப்பான் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது.
கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட காவல் துறையின் மூலம் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குற்றப்பதிவேட்டில் பதிவான நபர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் போலீஸ் நிலையங்களுக்கு மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், போலீஸ் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டு உள்ள வரவேற்பாளர்களுக்கு மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் இருந்து எவ்வாறு மனுக்களை பெற்று கொள்ள வேண்டும் என்று உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் முதல்- அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
கடுமையான நடவடிக்கை
அதுமட்டுமின்றி போலீஸ் நிலையங்களில் பெறப்படும் அனைத்து புகார் மனுக்களும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புகை சீட்டு மனுதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
புதன்கிழமைகள் தோறும் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் மனு விசாரணை முகாம் நடத்தி பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும். சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் தவறான வதந்தி செய்திகளை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக நீதி தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு பிரச்சினைக்கான தீர்வு காண வேண்டும். குறிப்பாக சாலை விபத்துகளை தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மாநாட்டில் முதல்- அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை அதிகாரிகள், தனிப்பிரிவு போலீசார், போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற சம்பங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.