கிரைண்டர் பழுதால் 20 நாட்களாக இட்லி வினியோகம் நிறுத்தம்


கிரைண்டர் பழுதால் 20 நாட்களாக இட்லி வினியோகம் நிறுத்தம்
x
தினத்தந்தி 10 Aug 2023 6:45 PM GMT (Updated: 10 Aug 2023 6:47 PM GMT)

ீர்காழி புதிய பஸ்நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் கிரைண்டர் பழுதானதால் கடந்த 20 நாட்களாக இட்லி வழங்கப்படவில்லை. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி புதிய பஸ்நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் கிரைண்டர் பழுதானதால் கடந்த 20 நாட்களாக இட்லி வழங்கப்படவில்லை. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அம்மா உணவகம்

சீர்காழி புதிய பஸ் நிலையத்தில், கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா உணவகம் திறக்கப்பட்டு, அதன் மூலம் தினமும் காலை ரூ.1-க்கு இட்லி, மதியம் ரூ5-க்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வந்தது. இது பள்ளி மாணவர்கள், ஆட்டோ, கார், வேன் ஓட்டுனர்கள், கூலித்தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்த நிலையில் அம்மா உணவகம் கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமலும், உணவகத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வினியோகம் செய்யப்படாத காரணத்தால் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறைந்து வருவதாக பொதுமக்கள் புகார் செய்து வந்தனர்.

கிரைண்டர் பழுது

இந்த நிலையில் அம்மா உணவகத்தில் இருந்த கிரைண்டர் பழுதடைந்ததால் கடந்த 20 நாட்களாக காலை வேளையில் இட்லி வழங்கப்படவில்லை. இதனால் அம்மா உணவகத்திற்கு வரும் மாணவர்கள் முதல் அனைத்து ஏழை-எளிய மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த உணவகத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிக்கும் எந்திரம், கேஸ் அடுப்பு, குடிநீர் குழாய் உள்ளிட்டவைகளும் பராமரிக்கப்படாமல் உள்ளது. ஒரே அடுப்பில் சமைப்பதால் மதியம் சாப்பிட வருபவர்களுக்கு உணவு வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பழுதடைந்த நிலையில் உள்ள கிரைண்டரை சரி செய்து தினமும் காலை வேளையில் வழக்கம்போல் இட்லி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் பழுதடைந்த நிலையில் உள்ள பொருட்களை சீரமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரப்பிரசாதம்

இதுகுறித்து ஏழை,எளிய பொதுமக்கள் கூறுகையில், அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் உணவு வழங்கி வருவது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. மேலும் எங்களை போன்றவர்களுக்கு இந்த உணவகம் தான் வரப்பிரசாதம் இதுவே தனியார் உணவகத்திற்கு சென்று சாப்பிட வேண்டுமானால் கூடுதல் பணம் செலவாகும். அதற்கான வருமானம் எங்களிடம் இல்லை. இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக கிரைண்டர் பழுது காரணமாக இட்லி வழங்காததால் மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து அம்மா உணவகத்தில் பழுதடைந்த பொருட்களை சரிசெய்து தரவேண்டும் என்றனர்.


Next Story