திருச்சி மாவட்டத்தில் 1,139 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை


திருச்சி மாவட்டத்தில் 1,139 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை
x

திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1,139 இடங்களில் விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1,139 இடங்களில் விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

1,139 விநாயகர் சிலைகள்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பா.ஜனதா கட்சியினர் மற்றும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொது நல அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்துவிட்டு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுக்கும், நீர் நிலைகளுக்கும் ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, முசிறி, லால்குடி, தொட்டியம், திருவெறும்பூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் 909 இடங்களிலும், பீமநகர் செடல்மாரியம்மன் கோவில் திடல், கோரிமேடு, உறையூர், மன்னார்புரம், கல்லுக்குழி உள்பட 230 இடங்களிலும் என்று மொத்தம் 1,139 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

மும்பையில் இருந்து...

இந்த சிலைகள் இன்று முதல் ஆங்காங்கே வைக்கப்பட உள்ளன. ஒரு சில இடங்களில் நேற்றே சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். பா.ஜனதா கட்சி சார்பாக மன்னார்புரம் நடுத்தெருவில் வைக்க மும்பையில் இருந்து ரெயில் மூலம் 6 அடி உயர விநாயகர் சிலை கொண்டுவரப்பட்டது. ஆபரணங்கள், கிரீடம் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்ட அந்த சிலையின் மதிப்பு ரூ.65 ஆயிரம் இருக்கும்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மாநகரில் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலும், மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பிரச்சினைக்குரிய இடங்களில் விநாயகர் சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடவும், கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

24 மணி நேரமும்...

மேலும் விநாயகர் சிலைகளை பூஜைக்காக வைப்பவர்கள், சிலைகளைப் பாதுகாக்கும் பணியில் போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், மத உணர்வுகளை தூண்டும் வகையில் ஒலி பெருக்கியில் யாரும் கருத்துக்களை பதிவு செய்யக்கூடாது என்றும், விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கும் விழா குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் காவல் பணியிலும் ஈடுபட வேண்டும் என்றும் போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.

துவரங்குறிச்சி

துவரங்குறிச்சி நகரில் சிவன் கோவில், பஸ் நிலையம் ஆத்துப்பட்டி உள்ளிட்ட 20 இடங்களில் இந்து முன்னனி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. சிறப்பு வழிபாடுகளுக்கு பிறகு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இன்று (புதன்கிழமை) மாலையில் பூதநாயகி அம்மன் கோவில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் சிலைகள் அனைத்தும் நீரில் கரைக்கப்படுகின்றன.


Next Story