ஐம்பொன் சிலைகள் விற்பனை பாதிப்பு


ஐம்பொன் சிலைகள் விற்பனை பாதிப்பு
x

ஜி.எஸ்.டி. வரி, செம்பு விலை உயர்வு காரணமாக ஐம்பொன் சிலைகள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. நலிவடைந்து வரும் தங்கள் தொழிலை காக்க அரசு முன்வர வேண்டும் என்று கைவினை கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

ஜி.எஸ்.டி. வரி, செம்பு விலை உயர்வு காரணமாக ஐம்பொன் சிலைகள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. நலிவடைந்து வரும் தங்கள் தொழிலை காக்க அரசு முன்வர வேண்டும் என்று கைவினை கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுவாமிமலையில் தயாராகும் சிலைகள்

சோழர் கால சிற்பக்கலை உலக புகழ் பெற்றது. மிகவும் பழமை வாய்ந்தது. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றும் சற்று கூட பழமை மாறாமல் தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் சோழர் கால பாணியில் சிலைகள் வடிவமைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும், பல்வேறு வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.சுவாமிமலையில் சிலைகளை வடிவமைக்கும் பணியில் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு சாமி சிலைகள் மட்டுமின்றி தலைவர்களின் சிலைகளையும் வடிவமைக்கின்றனர்.

பஞ்சலோக சிலைகள்

ஆரம்பத்தில் மனிதன், கடவுளை சிலைகளாக வடிவமைத்து கோவில் கட்டி வணங்கினான். இதற்காக தான் சிலைகள் உருவாகின. முதலில் கல் சிலைகள் உருவாக்கப்பட்டன. அவை மூலவர் என்று அழைக்கப்பட்டன. பின்னாளில் செம்பு மற்றும் ஈயத்தால் ஆன செப்பு திருமேனிகள் செய்யப்பட்டன. தொடர்ந்து செம்பு, பித்தளை, ஈயம், தங்கம், வெள்ளி ஆகிய 5 உலோகங்களால் செய்யப்பட்ட பஞ்சலோக சிலைகள் தயாரிக்கப்பட்டன. இந்த பஞ்சலோக சிலைகள் உற்சவராக ஊரை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

இதற்காக அம்மன், விநாயகர், பெருமாள், முருகன், ஆஞ்சநேயர், அய்யப்பன் ஆகிய சாமி சிலைகள் உள்பட பல்வேறு வகையான சிலைகள் செய்யப்படுகின்றன. இத்தகைய கலைநயமிக்க சிலைகள் தயாரிக்க அடிப்படை தேவையாக இருப்பது மண் தான்.

சுவாமிமலையில் உள்ள காவிரி ஆற்றில் வண்டல் மண் கிடைக்கிறது. இதுபோன்ற மண் தமிழகத்தின் வேறு எந்த பகுதியிலும் இல்லை. வண்டல் மண்ணின் தரம் சிறிது குறைந்தாலும் சிலைகளில் கீறல்கள் ஏற்பட்டு விடும். சிலைகள் தயாரிக்க குங்கிலியம், மெழுகு போன்ற மூலப்பொருட்களும் தேவை.

சிலைகள் செய்வது எப்படி

முதலில் எந்த சிலையை செய்ய நினைக்கிறார்களோ அந்த சிலையை போல மெழுகில் கரு உருவாக்கப்படும். காவிரி ஆற்றில் கிடைக்கும் வண்டல் மண்ணை அள்ளி வந்து அந்த மெழுகு சிலையின் மேல் பூசி வார்ப்பு செய்கிறார்கள். வார்ப்பின் கீழ்ப்பகுதியில் ஒரு சிறிய துளை வைக்கப்படும். மண் காய்ந்த பிறகு அதை அடுப்பில் வைத்து சூடாக்கி மெழுகை வெளியேற்றிவிடுவர்.இந்த உள்ளீடற்ற வார்ப்பில் நன்கு உருக்கப்பட்ட செம்பு, பித்தளை, ஈயம், தங்கம், வெள்ளி போன்ற ஐம்பொன்னை வார்ப்பில் உள்ள துளை வழியாக ஊற்றி சிறிது நேரம் கழித்து மண்ணை தட்டி உடைத்து உள்ளே உலோக சிலையை எடுப்பார்கள். அடுத்தகட்ட பணியாக சிலையை அரம் கொண்டு தோய்த்து, சீவிளி கொண்டு சீவி, பின் நகாசு வேலை செய்கின்றனர். இறுதியாக முகம் சம்பந்தப்பட்ட பணிகளை முடித்தால் சிலை முழுமை அடைந்துவிடும்.

ஜி.எஸ்.டி. வரி உயர்வு

சுவாமிமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தயார் செய்யப்படும் சிலைகள் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும், ஏராளமான வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் இப்போது முன்புபோல் சிலைகள் விற்பனை நடைபெறவில்லை.ஜி.எஸ்.டி. வரி உயர்வு, செம்பு விலை உயர்வு காரணமாக சிற்ப தொழில் நலிவடைந்து வருவதுடன் கைவினை கலைஞர்கள் பலர் வேறு தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே நலிவடையும் தங்கள் தொழிலை காக்க அரசு முன்வர வேண்டும் என கைவினை கலைஞர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story