''அனுமனை வழிபட்டால் சனி பயம் விலகும்'' சிவல்புரி சிங்காரம் பேச்சு


அனுமனை வழிபட்டால் சனி பயம் விலகும் சிவல்புரி சிங்காரம் பேச்சு
x
தினத்தந்தி 1 Aug 2023 12:30 AM IST (Updated: 1 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

‘‘அனுமனை வழிபட்டால் சனி பயம் விலகும்’’ என்று சிவல்புரி சிங்காரம் பேசினார்.

சிவகங்கை


''அனுமனை வழிபட்டால் சனி பயம் விலகும்'' என்று சிவல்புரி சிங்காரம் பேசினார்.

திருவிளக்கு பூஜை

காரைக்குடி அருகில் உள்ள வ.சூரக்குடியில் உள்ள சிவ ஆஞ்சநேயர் கோவிலில் 18-ம் ஆண்டாக திருவிளக்கு பூஜை கிரிவலக்குழுத்தலைவர் சிவல்புரி சிங்காரம் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். செட்டிநாடு ரமேஷ் குருக்கள் திருவிளக்கு பூஜையை நடத்தி வைத்தார்.

முன்னதாக கோவில் நிர்வாகி முத்துராமன், சிவல்புரி சிங்காரத்தின் ஆன்மிக சேவையை பாராட்டி பொன்னாடை அணிவித்தார். காரைக்குடி மாணிக்கம் முன்னிலை வகித்தார். அலர்மேலுமங்கை சீனிவாசன் இறை வணக்கம் பாடினார். இதைதொடர்ந்து சிவல்புரி சிங்காரம் "மகிழ்ச்சி தரும் மாருதி வழிபாடு" என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-

தடைகள் அகலும்

அனுமனை வழிபடுவதால் ஆனந்தமான வாழ்வு அமையும். பிணி தீர்க்கும் ஆற்றல் அனுமன் வழிபாட்டிற்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் பிரிந்தவரை இணைத்து வைக்கும் ஆற்றலும் உண்டு. பேச்சாற்றல் சிறப்பாக அமைய வழிவகுப்பவரும் அனுமன்தான். யுத்தம் நடந்தபோது மாண்டவரை மீட்டு கொண்டுவர சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு பறந்து வந்தவர் அனுமன். எனவே ஆரோக்கிய தொல்லையில் அவதிப்படுபவர்கள் அனுமனை வழிபட்டு மருத்துவ ஆலோசனை பெற்றால் நோய் குணமாகும்.

சனியின் பிடியிலிருந்து தப்பிக்க ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஜென்மச்சனி, பாதச்சனி, விரயச் சனி ஆகிய சனியின் ஆதிக்கம் நடப்பவர்கள் அனுமனை வழிபட்டால் வந்த துயர்கள் வாயிலோடு நிற்கும். சனி பயம் விலகும். அதுமட்டுமல்லாமல் செல்வ வளம் அதிகரிக்கும். தடைகற்களை படிக்கற்களாக மாற்றும் ஆற்றல் அனுமன் வழிபாட்டிற்கு உண்டு. அந்த அடிப்படையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அனுமன் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டால் கவலைகள் தீரும்.

நாடகம்

இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற இதுபோன்ற விளக்கு பூஜையில் கலந்து கொள்வது நல்லது. விளக்கு பூஜையில் கலந்து கொள்வதால் பொருள்வளம் பெருகும். புதிய வாழ்க்கை அமையும். நம் இல்லத்திலும் பஞ்சமுக விளக்கேற்றி வழிபட்டால் நல்வாழ்க்கை அமையும்..

இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து கந்தனின் காதல் மணம் என்ற நாடகம் நடைபெற்றது. இதில் வேந்தன்பட்டி சீனிவாசன், புதுக்கோட்டை அங்கப்பன்-விஜயா, ஆறுமுகம், அழகம்மை ராமநாதன், ஆலத்துப்பட்டி ஷர்மிளா பாலமுருகன், ஆத்தங்குடி முத்தையா, காரைக்குடி ஏகப்பன், ராமநாதன், மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி முத்துராமன், செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story