மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை


மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 May 2023 3:30 AM IST (Updated: 4 May 2023 3:30 AM IST)
t-max-icont-min-icon

விளைநிலங்களில் மின் வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

விளைநிலங்களில் மின் வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மின் வேலி

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி உள்ள விளை நிலங்களில் அடிக்கடி யானைகள், மயில்கள், காட்டுப்பன்றிகள், மான்கள் போன்ற வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்கவும், விளை நிலங்களில் அத்துமீறி நுழைவதை தடுக்க சட்டத்திற்கு புறம்பாக மின் வேலி அமைக்கப்படுகிறது. இதில் சிக்கி யானை உள்ளிட்ட வனவிலங்குகளும், மனிதர்களும் இறக்க நேரிடுகிறது.

இந்த நிலையில் வனப்பகுதியையொட்டி உள்ள பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள், ஒயர்கள் குறித்து வருவாய்த்துறை, மின்சாரத்துறை, வனத்துறை, போலீசார் கொண்ட குழு ஆய்வு நடத்தி வருகிறது. இதற்கிடையில் மின்வாரியம் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

குற்றவியல் தண்டனை

விளைநிலங்களில் பயிரிட்டு உள்ள பயிர்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவும், வீடு மற்றும் இதர விவசாய மின் இணைப்புகளில் இருந்து மின் வேலி அமைப்பது இந்திய மின்சார சட்டத்தின்படி குற்றமாகும். இதற்கு குற்றவியல் தண்டனை வழங்கப்படும். மின் வேலி அமைப்பது தெரியவந்தால் பொதுமக்கள் செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இதற்காக அங்கலகுறிச்சி, வால்பாறை, தென்சங்கம்பாளையம், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை, தேவனூர்புதூர், எரிசனம்பட்டி, ஜமீன்முத்தூர், மண்ணூர், மார்ச்சநாயக்கன்பாளையம் பகுதிகளுக்கு என்று தனி, தனியாக செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்கள் பாதுகாக்கப்படும். சட்டவிரோதமாக மின் வேலி அமைக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story