பாஜகவாக இருந்தால், போய் அந்த கட்சியில் சேர்ந்து விடுங்கள் - கவர்னர் ஆர்.என்.ரவி மீது துரைமுருகன் சாடல்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதி கலைஞராக, பாதி அண்ணாவாகிவிட்டார் என்று சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சென்னை,
கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்தார். தமிழக கவர்னருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசுத் தலைவரை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டசபை விதிகளில் உள்ள கவர்னர் தொடர்பான சில பதங்களை நிறுத்திவைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் குறித்து சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
கணத்த இதயத்தோடு தான் முதல்-அமைச்சர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். ஆட்சிக்கு வருவோம் என தெரியும் முன்பே கவர்னர் தேவையில்லை என்று கூறியது திமுக. மாநில அரசை ஆட்டிபடைக்க ஒரு ஏஜென்ட் தேவை என்பதால் கவர்னர் பதவியை மத்திய அரசு உருவாக்கியது.
கவர்னர் மாளிகையில் ஒளிரபரப்பான சுதந்திர போராட்ட வீரர்கள் படத்தில், காந்தியும் இல்லை, நேருவும் இல்லை. காந்தி இல்லாமல் சுதந்திர போராட்டமா?, யார் வீட்டு அப்பன் பணத்தில் இதை காட்டுகிறீர்கள். பாஜகவாக இருந்தால், போய் அந்த கட்சியில் சேர்ந்து விடுங்கள்.
கவர்னருக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வரப்படுவதை அறிந்தே அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். "முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போதே பாதி கலைஞராக, பாதி அண்ணாவாகிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.