கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயன்றால்தமிழ்நாட்டு மக்கள் ஒன்று திரண்டு போராடுவார்கள்


கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயன்றால்தமிழ்நாட்டு மக்கள் ஒன்று திரண்டு போராடுவார்கள்
x

கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட முயன்றால் அதை எதிர்த்து தமிழ்நாட்டு மக்கள் ஒன்று திரண்டு போராடுவார்கள் என்று தர்மபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

தர்மபுரி

நடை பயணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஒகேனக்கல்லில் தொடங்கிய 3 நாள் நடைபயணம் நேற்று மாலை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது. அங்கு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள ஒரே வற்றாத ஜீவ நதி காவிரி. தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட பெருநகரங்களுக்கு குடிநீருக்கு ஆதாரமாக காவிரி ஆறு விளங்குகிறது.. காவிரி ஆறு கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு சொந்தமானது.

ரூ.1000 கோடி செலவு

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்க மறுத்து சுப்ரீம் கோர்ட்டு சென்றது கர்நாடகா. சுப்ரீம் கோர்ட்டு விவாதித்து இறுதியாக 174 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என தீர்ப்பு அளித்தது. கடந்த 50 ஆண்டுகளில் இந்த வழக்குக்காக தமிழக அரசு ரூ.1000 கோடி செலவழித்துள்ளது. இறுதி தீர்ப்பு வந்த பிறகும் மேகதாதுவில் அணைகட்டுவோம் என முந்தைய பா.ஜனதா அரசு கூறியது.

இது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசும் அனுமதி அளித்தது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கூடாது என்று பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் முதல்-அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகிறார். பா.ஜனதா தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான கட்சி.

காவிரி உபரிநீர் திட்டம்

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டு மக்கள் ஒன்று திரண்டு போராடுவார்கள். காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம்.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லி பாபு உள்பட கட்சி நிர்வாகிகள் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று இரவு இந்த கோரிக்கை தொடர்பாக மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் மனு அளிக்கப்பட்டது.


Next Story