திருவிழாக்களை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்டால் 7 நாட்களில் பரிசீலனை -ஐகோர்ட்டு உத்தரவு


திருவிழாக்களை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்டால் 7 நாட்களில் பரிசீலனை -ஐகோர்ட்டு உத்தரவு
x

திருவிழாக்களை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்டால் 7 நாட்களில் பரிசீலனை போலீஸ் டி.ஜி.பி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.

மதுரை,

மதுரை ஐகோர்ட்டு எல்லைக்கு உட்பட்ட மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு ஆடல்-பாடல், கரகாட்டம், கபடி என பல்வேறு கலாசார நிகழ்வுகள் நடந்த அனுமதி கேட்டு ஏராளமான மனுக்கள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், கோவில் திருவிழாவையொட்டி கிராமங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். இதற்கு போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு அளித்தால், எந்த பதிலும் அளிப்பதில்லை.

போலீசாரின் தாமதத்தினால் கிராமத்தினர் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது. இதனால் உரிய அனுமதி வழங்க கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்கும் மனுக்கள் மீது பதில் கூறாமல் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே ஆடல்-பாடல், கரகாட்டம் உள்ளிட்ட கலாசார நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி போலீஸ் நிலையத்தில் மனு அளித்தால், அந்த மனுக்களை 7 நாட்களுக்குள் போலீஸ் அதிகாரிகள் பரிசீலனை செய்து உரிய உத்தரவு வழங்க வேண்டும். 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை என்றால் அந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கியதாகவே கருதப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தமிழக அரசின் போலீஸ் டி.ஜி.பி. சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் புதிதாக ஒரு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், இது சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story