விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் இலங்கையை போல் இங்கும் நிகழும்-இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பேச்சு


விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் இலங்கையை போல் இங்கும் நிகழும்-இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பேச்சு
x

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் இலங்கையை போல் இங்கும் நிகழும் என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் தீரன் நகரில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட 8-வது மாநாடு நேற்று நடந்தது. இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பத்மாவதி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட 3,200 ஏக்கர் நிலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.

தி.மு.க. அரசால் ஏற்கனவே அறிவித்தப்படி பெரம்பலூரில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சின்னமுட்லு நீர்த்தேக்கம் திட்டத்தை தொடங்க வேண்டும். கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர், துறையூர் வழியாக நாமக்கல் வரை புதிய ரெயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், நாட்டில் விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவை மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. விலைவாசி உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லையென்றால் இலங்கையை போல் இங்கும் நிகழும். அரிசி, பருப்பு, கோதுமை, தயிர் போன்ற பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. விதித்திருப்பது சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும். இதுகுறித்து விவாதிக்க உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் அனுமதிக்க மாட்டோம் என கூறி வருவது ஜனநாயகத்துக்கு எதிரானது. மின் கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பு வந்த உடனேயே இந்திய கம்யூனிஸ்டு கட்சி எதிர்ப்பு தெரிவித்தது, இப்போதும் எதிர்த்து வருகிறோம். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தற்கொலை சம்பவங்கள் தொடர்வது நல்லதல்ல. மாணவ, மாணவிகளின் மனநிலை பாதிப்புக்கான காரணத்தை கண்டறிந்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளில் அரசும், பள்ளிக்கல்வித்துறையும் ஈடுபட வேண்டும், என்றார்.


Next Story