பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டால்தெரியப்படுத்த வேண்டும்
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டால் தெரியப்படுத்த வேண்டும் என கலெக்டர் உமா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பள்ளி செல்லா குழந்தைகள்
நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி செல்லா குழந்தைகள் திட்டக் கூறின்கீழ் மூன்றடுக்கு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா தலைமை தாங்கினார். இதில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கணக்கெடுப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் உமா பேசுகையில்,
நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி கைபேசி செயலியின் மூலம் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. பள்ளி பொதுத்தளத்தில் உள்ள 6,338 மாணவர்கள் கண்காணிக்கப்பட உள்ளனர். கணக்கெடுப்பு பணியின் போது பள்ளியில் சேர்க்க வேண்டிய குழந்தை என கண்டறியப்பட்டவர்களை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்களால் பள்ளியில் சேர்க்க முடியவில்லை என்றால், சம்பந்தப்பட்ட பிற துறை அலுவலர்கள் உதவியுடன் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணக்கெடுப்பு பணி
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், கிராமப்புற செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் கல்வி தன்னார்வலர்கள் என அனைவரும் இக்கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
மேலும் கணக்கெடுப்பு விவரங்கள் மற்றும் புகைப்படங்களை கணக்கெடுப்பு செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டால் 1098 என்ற இலவச சேவை எண்ணிற்கோ அல்லது சம்பந்தப்பட்ட வட்டார வள மையத்திற்கோ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் உமா பேசினார்.