குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தால் தகவல் தெரிவிக்கலாம்


குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தால் தகவல் தெரிவிக்கலாம்
x
தினத்தந்தி 16 Oct 2023 7:15 PM GMT (Updated: 16 Oct 2023 7:15 PM GMT)

கோவை கல்லூரி விடுதி மாணவிகளுக்கு வாந்தி- வயிற்றுப்போக்கு சம்பவம் எதிரொலியாக, மாநகர பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தால் தகவல் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை கல்லூரி விடுதி மாணவிகளுக்கு வாந்தி- வயிற்றுப்போக்கு சம்பவம் எதிரொலியாக, மாநகர பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தால் தகவல் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.

மாணவிகளுக்கு வாந்தி

கோவையில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்த கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் மாணவிகள் குடித்த தண்ணீரில் ஏதோ கலந்து இருந்ததால் 50-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

விரைவாக அந்த மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதையடுத்து அந்த கல்லூரி மாணவிகளுக்கு வருகிற 24-ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் மாதிரி மற்றும் செமஸ்டர் தேர்வும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன் அந்த பகுதிக்கு மாநகராட்சி குழுவினர் நேரில் சென்று குடிநீரை ஆய்வு செய்தனர்.

ஆணையாளர் ஆய்வு

இந்த நிலையில் குடிநீரில் கழிவுநீர் கலந்தது காரணமாகதான், அதை குடித்த மாணவிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்றார். பின்னர் அந்த கல்லூரியில் உள்ள குடிநீர் தொட்டியை பார்வையிட்டு, தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தார். அத்துடன் அந்தப்பகுதியில் இலவச மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. அந்த முகாமையும் ஆணையாளர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் இது குறித்து கூறியதாவது:-

தகவல் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் வழங்கும் பணி மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதனால் ஏற்படும் குடிநீர் கசிவுகள் உடனுக்குடன் சரிசெய்யப்படுகிறது. அத்துடன் அது தொடர்பாக ஆய்வும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குடிநீர் குழாயில் பழுது ஏற்படும்போது அதன் வழியாக கழிவுநீர் கலக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் தாங்கள் வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டியை நன்றாக சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். அத்துடன் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தால் உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதுபோன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் அரசு, தனியார் பள்ளிகளில் இருக்கும் குடிநீர் தொட்டிகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story