கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆஜராக வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால்  பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்  ஆஜராக வேண்டும்-  மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த ஜெகநாதன், முத்து விஜயன், மீனாட்சி, ரவி, தங்கராஜ், முருகேசுவரி, ஜெயந்தி, முருகேசன், நாராயணன், பாண்டி, ஜோதி சிங், முருகன் உள்ளிட்ட பலர், மதுரை ஐகோர்ட்டில் அவமதிப்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அவற்றில், பல ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக பணியாற்றிய தங்களது பணியை பகுதிநேர ஊழியர்களாக கருதி, உரிய பணப்பலன்களை வழங்குவது தொடர்பாகவும், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பதவி உயர்வு உள்ளிட்ட பல உத்தரவுகளையும் கோர்ட்டு பிறப்பித்து இருந்தது.

ஆனாலும் அந்த உத்தரவுகளை பின்பற்றி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே இதற்கான அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி தண்டபாணி விசாரித்தார்.

முடிவில், பள்ளிக்கல்வித்துறைக்கு கோர்ட்டு பிறப்பித்த பல்வேறு உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் தற்போது வரை நிலுவையில் உள்ளன. எனவே கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை நிறைவேற்றி, அது தொடர்பான அறிக்கையை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை செயலாளர், முதன்மை கணக்காளர், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Next Story