பொது சிவில் சட்டத்தை கைவிடாவிட்டால் தொடர் போராட்டம் -எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் பேச்சு


பொது சிவில் சட்டத்தை கைவிடாவிட்டால் தொடர் போராட்டம் -எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் பேச்சு
x

பொது சிவில் சட்டத்தை கைவிடாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என மதுரையில் நடந்த எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கூறினார்.

மதுரை


பொது சிவில் சட்டத்தை கைவிடாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என மதுரையில் நடந்த எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கூறினார்.

பொது சிவில் சட்டம்

பொது சிவில் சட்டத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் சார்பாக தெற்குவாசல் கிரைம் பிராஞ்ச் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் வரவேற்றார். தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தொகுப்புரையாற்றினார். மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் செயலாளர் நிஸ்தார் அகமத், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பொருளாளர் அப்துல் காதர், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் முன்னாள் தலைவர் நஜ்முதீன் மற்றும் அனைத்து கட்சி, இயக்க, ஜமாஅத் நிர்வாகிகள், உலாமா பெருமக்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பேசியதாவது:-

"இந்தியா என்பது பல்வேறு கலாசார, இன, மத மற்றும் மொழியியல் குழுக்கள் வாழும் பன்முகத்தன்மை கொண்ட நாடாகும். இந்த சூழலில் ஒரே நாடு, ஒரே மொழி என இந்த தேசத்தை ஒற்றை கலாசார தேசமாக மாற்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அஜண்டாவை பின்பற்றி ஒரே சிவில் சட்டம் கொண்டுவர பா.ஜ.க. அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. பா.ஜ.க. பதவியேற்ற பிறகு தங்களது தேர்தல் வாக்குறுதியான பொது சிவில் சட்டம் நோக்கி காய்களை நகர்த்தி வருகின்றது. 9 ஆண்டுகால ஆட்சியின் தோல்வியை மறைப்பதற்காக, எதிர்ப்புகளையும் மீறி அதனை கொண்டுவர முயற்சிக்கிறது.

கடும் எதிர்ப்பு

பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளன. தமிழகத்தில் பா.ஜ.க. தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஒரேகுரலில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. இந்த சட்டம் கொண்டுவரப்பட்டால் மக்களின் வாழ்வியல் நடைமுறைகளில் பல சிக்கல்கள் உருவாகும். எனவே, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு இந்த சட்டத்திற்கு எதிராக குரலெழுப்ப வேண்டும். பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக தமிழக அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் பொது சிவில் சட்டத்தை கைவிடாவிட்டால், நாடுமுழுவதும் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், மதுரை எம்.எல்.ஏ. பூமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. பி.வி. கதிரவன் உள்ளிட்டோர் பேசினர். இதில், சி.பி.ஐ., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில், மதுரை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.


Related Tags :
Next Story