சரியான நேரத்துக்கு அரசு பஸ் வராவிட்டால் புகார் தெரிவிக்கலாம் -போக்குவரத்து கழக அதிகாரி தகவல்
சரியான நேரத்துக்கு அரசு பஸ் வராவிட்டால் புகார் தெரிவிக்கலாம் என போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்தார்.
சரியான நேரத்துக்கு அரசு பஸ் வராவிட்டால் புகார் தெரிவிக்கலாம் என போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பஸ் பாதுகாப்பு பயணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை சேதுபதி பள்ளியில் நடந்தது. அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பொது மேலாளர் இளங்கோ கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் விபத்துக்களின் மூலம் ஆண்டுக்கு 1½ லட்சம் பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஒரு நாளில் 426 பேரும், ஒரு மணி நேரத்திற்கு 18 பேரும் இறக்கின்றனர். சாலை எந்த அளவிற்கு சிறப்பாக இருந்தாலும் வாகனங்களின் அதிக வேகத்தாலும், வாகன நெருக்கடியாலும் விபத்துகள் அதிக அளவில் நடக்கிறது. விபத்துகளில் இருந்து தப்பிக்க சாலை விதிகளை பின்பற்றுவதுடன், பெற்றோர்களின் அறிவுரைகளையும் கேட்க வேண்டும்.
புகார் தெரிவிக்கலாம்
செல்போன் பேசி கொண்டே வாகனங்கள் ஓட்டக்கூடாது. அதனாலும் அதிக அளவு விபத்துகள் நடக்கிறது. மோட்டார் சைக்கிள்களில் வேகமாக செல்லக்கூடாது. வேகம் என்பது சாலையை பொறுத்து மாறுபடும். அந்தந்த சாலைகளுக்கு ஏற்றவாறு வாகனங்களை இயக்க வேண்டும். பள்ளி நிறுத்தங்களில் பள்ளியின் சார்பில் அலுவலர்களை நிறுத்தி வைத்து, மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். சரியான நேரத்திற்கு பஸ்கள் வரவில்லை என்றாலும், இதுபோல் அரசு பஸ்களில் வேறு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் 9487599020 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம். மாணவர்களுக்கு, அதிக வேக வாகனங்களை பெற்றோர் வாங்கி கொடுக்கக்கூடாது. கூட்டுக்குடும்பங்கள் அழிந்ததால் தான் மாணவர்களை கட்டுப்படுத்தவும், வழிநடத்தவும் முடியாத நிலை உள்ளது. பெற்றோர் நினைத்தால் மட்டுமே பிள்ளைகளை சரிவர திருத்தி வளர்க்க முடியும். படிக்கும் புத்தகம் மட்டுமின்றி பொது சிந்தனை உள்ள நூல்களையும் மாணவர்கள் வாசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாநகர துணை கமிஷனர் ஆறுமுகசாமி, போக்குவரத்து கழக அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பஸ்களில் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்வேன் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.