குளிர்பானம், பழச்சாறு தரமற்றதாக இருந்தால் வாட்ஸ்-அப்பில் புகார் அளிக்கலாம்கலெக்டர் ஸ்ரீதர் அறிவிப்பு
வெயில் தாக்கத்தால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி பருகும் குளிர்பானம், பழச்சாறு தரமற்று இருந்தால் வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்கலாம் என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறியுள்ளார்.
நாகர்கோவில்,
வெயில் தாக்கத்தால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி பருகும் குளிர்பானம், பழச்சாறு தரமற்று இருந்தால் வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்கலாம் என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோடை காலம்
கோடை காலம் தொடங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தைக் குறைக்க பலவித குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகளை அருந்தும் சூழல் காணப்படுகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் சாலையோர மற்றும் நிரந்தர குளிர்பான கடைகளில் பரவலாக பொதுமக்களின் நுகர்வு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சாலையோர மற்றும் நிரந்த வணிகம் செய்யும் வணிகர்கள், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குதலை உறுதி செய்ய வேண்டும். சாலையோர உணவு வணிகர்கள் உட்பட அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு தரச்சட்டத்தின்படி உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிழ் பெற்றிருத்தல் அவசியம்.
உணவு பாதுகாப்பு உரிமம்
குளிர்பானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவு பொருட்களாக இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலான செயற்கை வண்ணங்களை சேர்த்தல் கூடாது. நுகர்வோருக்கு வழங்கும் முன்னர் அதன் காலாவதி தேதியை உறுதிப்படுத்திட வேண்டும்.
பழச்சாறு தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் அழுகிய பழங்களையும், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களையும் பயன்படுத்தக்கூடாது.
வாட்ஸ்அப் எண்
ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி கோப்பைகளில் பழச்சாறுகளை வழங்காமல் அரசால் அனுமதிக்கப்பட்ட கோப்பைகளில் மட்டுமே வழங்க வேண்டும். அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் குடிநீர் கொள்கலன்களை சூரிய ஒளிபடும்படி வைக்க கூடாது.
இத்தகைய வழிகாட்டுதல்களை கடைபிடித்து பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்கவும், போதுமான அளவு உடலின் நீர்ச்சத்தை பராமரித்து உடல்நலனை பேணவும், தரமான, பாதுகாப்பான குடிநீர், மோர், இளநீர், குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகளை வழங்க வேண்டும். இதுகுறித்து ஏதேனும் புகார்கள் இருந்தால் பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.