உரிய விளக்கம் இல்லை என்றால் நகரமைப்புத்துறை இயக்குனர் ஆஜராக நேரிடும்: ஆற்றுப்படுகை சாயப்பட்டறை கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி

உரிய விளக்கம் இல்லை என்றால் நகரமைப்புத்துறை இயக்குனர் ஆஜராக நேரிடும்: ஆற்றுப்படுகை சாயப்பட்டறை கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x

ஆற்றுப்படுகையில் சாயப்பட்டறை கட்டிடங்கள் குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் நகர் மற்றும் ஊரமைப்புத்துறை இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

மதுரை

ஆற்றின் அருகில் சாயப்பட்டறை

கரூரைச் சேர்ந்த வக்கீல் தனசேகரன், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2021-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கரூர் மாவட்டத்தில் ஓடும் அமராவதி ஆற்றில் இருந்து குறிப்பிட்ட தூரத்துக்கு சாயப்பட்டறை தொழிற்சாலைகள் அமைப்பதற்கும், செயல்படுவதற்கும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்த உத்தரவை மீறி, திருப்பூரை சேர்ந்த தனியார் துணி நிறுவனம் அமராவதி ஆற்றில் இருந்து 860 மீட்டர் தூரத்தில் சாயப்பட்டறை அமைத்து, கழிவுகளை ஆற்றில் கலக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த தனியார் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு இந்த நிறுவனம் சார்பில் 14 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதற்கு அதிகாரிகள் அனுமதித்து உள்ளனர். விசாரணையில் இதற்கான அனுமதியை பல்வேறு கட்டங்களாக வழங்கியது தெரிந்தது.

கட்டிடங்கள் அப்புறப்படுத்தல்

இதனால் கரூரில் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் அரசு உத்தரவுக்கு மாறாக சாயப்பட்டறைக்கு அனுமதி பெறப்பட்டு உள்ளது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசின் நகரமைப்புத்துறை இயக்குனருக்கு புகார் அனுப்பினோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே சட்டவிரோதமாக அமராவதி ஆற்றுப்படுகையில் கட்டப்பட்டு உள்ள சாயப்பட்டறை கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தவும், இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நடவடிக்கை எடுக்காதது ஏன்?

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் கடந்த 2020-ம் ஆண்டிலேயே மனுதாரர் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்து உள்ளார். 3 வருடம் ஆகியும் அந்த மனுவை விசாரித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இந்த காலதாமதம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழக நகர் மற்றும் ஊரமைப்புத்துறை இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story