டிக்கெட் விலையை உயர்த்தினால் மக்கள் எப்படி படம் பார்க்க வருவார்கள்? - இயக்குனர் சுரேஷ் காமாட்சி


டிக்கெட் விலையை உயர்த்தினால் மக்கள் எப்படி படம் பார்க்க வருவார்கள்? - இயக்குனர் சுரேஷ் காமாட்சி
x

டிக்கெட் விலையை உயர்த்தினால் மக்கள் எப்படி படம் பார்க்க வருவார்கள் என இயக்குனர் சுரேஷ் காமாட்சி கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னை,

சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசிடம் மனு அளித்துள்ளது. மல்டிபிளக்ஸ், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள திரையரங்குகள் மற்றும் ஐமேக்ஸ் திரையரங்குகள் என வகைப்படுத்தப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.250 ஆகவும், ஏசி திரையரங்குகளுக்கு ரூ. 200 ஆகவும், ஏசி இல்லாத திரையரங்குகளுக்கு ரூ. 120 ஆகவும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், டிக்கெட் விலையை உயர்த்தினால் மக்கள் எப்படி படம் பார்க்க வருவார்கள் என இயக்குனர் சுரேஷ் காமாட்சி கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய டுவீட்டரில் கூறியுள்ளதாவது;

"ஏற்கெனவே திரையரங்கிற்குள் வருபவர்கள் விலைவாசியால் ஹோம் தியேட்டருக்குள் புகுந்துகொண்டிருக்கிறார்கள். இன்னமும் டிக்கெட் விலையை அதிகப்படுத்தினால் மக்கள் எப்படி படம் பார்க்க வருவார்கள்??! சிறிய படங்களின் நிலை என்னாகும்..?! அரசும், திரையரங்க உரிமையாளர்களும் திரையரங்கிற்கு வருபவர்களைப் பற்றியும் நினைத்துப் பார்த்து இதை தவிர்க்க வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story