ஐ.எப்.எஸ். நிதிநிறுவன ஏஜெண்டு வீட்டின் முன்பு காத்திருப்பு போராட்டம்


ஐ.எப்.எஸ். நிதிநிறுவன ஏஜெண்டு வீட்டின் முன்பு காத்திருப்பு போராட்டம்
x

நெமிலியில் உள்ள ஐ.எப்.எஸ். நிதி நிறுவன ஏஜெண்டுக்கு சொந்தமான திருமண மண்டபத்துக்கு முதலீட்டாளர்கள் பூட்டு போட்டு, வீட்டு முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை

ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம்

வேலூரை தலைமையிடமாக கொண்டு ஐ.எப்.எஸ். என்ற நிதிநிறுவனம் செயல்பட்டுவந்தது. ஒரு லட்சம் கட்டினால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வட்டி தரப்படும் என்ற கவர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டது.

இதை நம்பிய நெமிலி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ரூ.200 கோடிவரை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் நெமிலி பகுதி ஏஜண்டாக ஜெகன்நாதன் என்பவர் நியமிக்கப்பட்டு இவர் மூலமாக மக்கள் பணத்தை கட்டி வந்தனர்.

காத்திருப்பு போராட்டம்

திடீரென்று 6 மாதத்திற்கு முன்பு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை தராமல் மோசடி செய்ததாக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் தலைமறைவானதால் பணத்தை திரும்ப தரக்கோரி முதலீட்டாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர்.

இந்த நிலையில் நேற்று நெமிலியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பணத்தை திருப்பித் தரக்கோரி, ஐ.எப்.எஸ். ஏஜெண்டு ஜெகன்நாதனுக்கு சொந்தமான நெமிலி- ஓச்சேரி சாலையில் உள்ள திருமண மண்டபத்துக்கு பூட்டுபோட்டனர். மேலும் நெமிலி ஆற்றோர தெருவில் உள்ள அவரின் வீட்டின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் நெமிலி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story